பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் மீண்டும் நீர்க்கசிவு சம்பவம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு டினோன் (Denon) விங் பகுதியில் உள்ள ஒரு குழாய் வெடித்ததே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் உள்ளிட்ட பல மதிப்புமிக்க கலைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அதிர்ஷ்டவசமாக மோனா லிசா ஓவியத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும், பிரெஞ்சு கலைஞர் சார்ல்ஸ் மேனர் வரைந்த உட்கூரை ஓவியம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே அதிகமான பார்வையாளர்கள் வருகை தரும் அருங்காட்சியகமாக லூவர் அறியப்படுகிறது. ஆனால், அதன் கட்டமைப்பு பராமரிப்பில் தொடர்ச்சியான சவால்கள் இருப்பதாக முன்பே கவலைகள் எழுந்திருந்தன.
இதற்கிடையில், லூவர் அருங்காட்சியக நுழைவுச்சீட்டு மோசடி தொடர்பாக 9 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர்களில் இருவர் அருங்காட்சியக ஊழியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீன சுற்றுலாப் பயணிகள் ஒரே நுழைவுச்சீட்டுகளை பலமுறை பயன்படுத்த வழிகாட்டிகளுக்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த மோசடி காரணமாக லூவர் அருங்காட்சியகத்திற்கு சுமார் 11.9 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.