தமிழ்நாடு, சேலத்தில் பிரசித்தி பெற்ற செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22.02.2026) வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று வியாழக்கிழமை முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முதல் நாளான நேற்று (19) தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. சேலம், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் திருக்கோயிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த நீரை குடங்களில் ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
தாரை, தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க, குதிரை மற்றும் பசு மாடுகள் அணிவகுத்துச் செல்ல, செவ்வாய்பேட்டை பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று இறுதியில் மாரியம்மன் கோயிலை அடைந்தது. பின்னர் கொண்டு வரப்பட்ட தீர்த்தக் கலசங்கள் யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த தீர்த்தக்குட ஊர்வலத்தையொட்டி செவ்வாய்பேட்டை பகுதியில் பொலிஸார் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். மகா கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.