இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கத்தி முனையில் நடக்கும் குற்றச் செயல்கள் கடந்த ஆண்டில் 10 சதவீதம் குறைந்துள்ளதாகத் தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் 54,548ஆக இருந்த இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கை, 2025இல் 49,151ஆகக் குறைந்துள்ளது.
இது கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும்.
குறிப்பாக, இலண்டன் மாநகரக் காவல்துறை (Met Police) மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதிகளில் கத்திக்குத்து குற்றங்கள் 17 சதவீதம் வரை குறைந்துள்ளன. கத்தி அல்லது கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் கொலைச் சம்பவங்களும் 21 சதவீதம் சரிந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தில் கொலைக் குற்றங்கள் 6 சதவீதம் குறைந்துள்ள நிலையில், கடைத்திருட்டு தொடர்பான குற்றப் பதிவுகளிலும் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், திருட்டில் ஈடுபடுவோர் வன்முறையைப் பிரயோகித்தால் அது ‘கொள்ளை’ (Robbery) என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படும் என விதிகள் மாற்றப்பட்டதே இந்தச் சரிவுக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
குற்றங்களைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பலன் அளிப்பதாகக் காவல்துறை அமைச்சர் சாரா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். அதேசமயம், கடை ஊழியர்களுக்கான பாதுகாப்பு இன்னும் சவாலாகவே இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.