“அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும். அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும், தெரிவும், கொள்கையும் அரசியல் சூழலாலும் அதன் நோக்கங்களாலும் வடிவமைக்கப்படுகின்றன” என இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இங்கிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி, University of Sussex பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுக் கழகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதான விருந்தினராக கலந்துகொண்டு விசேட உரையாற்றியபோதே, இந்தக் கருத்தை தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு, அரசியல், நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இடையிலான நெருங்கிய தொடர்பைப் பற்றி பிரதமர் விரிவாக விளக்கினார். ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது பொருளாதார வளர்ச்சியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; மக்களின் நம்பிக்கை, அரசியல் நிலைத்தன்மை, பொறுப்புணர்வான நிர்வாகம் மற்றும் சமூக நீதி போன்ற அம்சங்களும் அதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியத்தையும், அதேவேளையில் ஜனநாயகப் பொறுப்புக்கூறலை பாதுகாத்து நாட்டின் பொருளாதார மீட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டிய சவால்களையும் பிரதமர் எடுத்துரைத்தார். சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் அரச நிறுவனங்களின் செயல்திறன் மேம்பாடு ஆகியவற்றை சமநிலைப்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய பொருளாதாரத்தில் ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்பு பணிகளின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். குறிப்பாக பெண்கள் அதிகமாக ஈடுபட்டு வரும் பராமரிப்பு துறையின் பங்களிப்பு நீண்டகாலமாக பொருளாதார கணக்கெடுப்புகளில் உரிய மதிப்பீட்டை பெறவில்லை என்றும், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் உழைப்பை அரசாங்கம் கொள்கை ரீதியாக கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
