அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் அமலில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும் இரு நாடுகளும் வியாழக்கிழமை உடன்பாட்டை எட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த உடன்பாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை இறுதி ஒப்புதல் வழங்கவில்லை என்றும், ஒப்பந்தம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில், இரு நாடுகளுக்கிடையேயான போர்நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், ஈரானின் அணுசக்தி திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து தடையின்றி நடைபெற வாய்ப்பு உருவாகியுள்ளது.
வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் நிர்வாகங்கள் இந்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தால், கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான பதற்ற நிலைக்கு பின்னர் அமைதியை நோக்கிய மிக முக்கிய முன்னேற்றமாக இது பார்க்கப்படும்.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்திருந்தாலும், அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்ட பின்னணியிலேயே இந்த புதிய உடன்பாடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.