இங்கிலாந்தில் நிலவி வரும் கடும் வெப்ப அலைக்கு இடையே, நீர் நிலைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு விபத்துகளில் இதுவரை குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட யார்க்ஷயரின் பேர்ன்சால் (Burnsall) என்ற சுற்றுலாத் தளத்திற்கு அருகே உள்ள வார்ஃப் (River Wharfe) ஆற்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06:30 மணியளவில் 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனார். பொதுமக்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு, விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலியன் ஸ்மித் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தெற்கு யார்க்ஷயரின் மெக்ஸ்பரோ (Mexborough) பகுதியில் உள்ள டான் (River Don) ஆற்றில் சனிக்கிழமை இரவு விழுந்த 11 வயது சிறுவனைத் தேடும் பணி இன்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாக நீடித்தது. நீர்மூழ்கித் தேடுதல் குழுக்கள் மற்றும் மலை மீட்பு தன்னார்வலர்கள் ஆற்றிலும் நிலத்திலும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மெர்சிசைடு (Merseyside) கடற்கரையில் விபத்தில் சிக்கிய செஷயரைச் சேர்ந்த 15 வயது சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தார்.
லங்காஷயரில் ஆற்றில் விழுந்த தனது நாயைக் காப்பாற்ற முயன்ற 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார்; அவருடன் சென்ற முதியவர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள ஒரு ஏரியில் மீட்கப்பட்ட 19 வயது இளைஞர் ஒருவரும், நார்ஃபோல்க் புரோட்ஸ் பகுதியில் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.
வார்ஃப் ஆற்றின் இப்பகுதியில் இதற்கு முன்பும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் நிலைகளுக்கு அருகில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.