ஈரானை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்க் கப்பல் ஒன்றை அமெரிக்க இராணுவம் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலின் வீடியோவையும் அமெரிக்க இராணுவத்தின் மத்தியத் தடைத்தளம் வெளியிட்டுள்ளது.
போஸ்ட்வானா நாட்டுக் கொடியை ஏந்தியிருந்த எண்ணெய்க் கப்பலின் இயந்திர அறையை குறிவைத்து Hellfire ரக ஏவுகணை ஏவப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அமைப்பு செயலிழந்ததாகவும் அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.
குறித்த கப்பலுக்கு 24 மணி நேரத்திற்குள் பல முறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும், அவற்றை கப்பல் பணியாளர்கள் புறக்கணித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் துறைமுகங்களை நோக்கிச் செல்லும் கடல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்க இராணுவம் தாக்கிய 6ஆவது கப்பல் இதுவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சம்பவம் தொடர்பாக ஈரான் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.