செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்கள் கடத்த முயற்சி: 8 புறாக்கள் உயிரிழப்பு – இருவருக்கு அபராதம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்கள் கடத்த முயற்சி: 8 புறாக்கள் உயிரிழப்பு – இருவருக்கு அபராதம்!

1 minutes read

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமாக 64 புறாக்களை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற வென்னப்புவவைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இலங்கை சுங்கத் திணைக்களம் மொத்தமாக 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சுங்க அதிகாரிகள் தெரிவித்ததன்படி, 38 மற்றும் 42 வயதுடைய இந்த இரு சகோதரர்களும் இத்தாலியில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் EK652 என்ற விமானத்தின் மூலம் நேற்று (25) மாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் விமான நிலையத்தின் பசுமை வழித்தடம் (Green Channel) ஊடாக வெளியேற முயன்றபோது, சந்தேகத்தின் அடிப்படையில் இரவு சுமார் 7.15 மணியளவில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விரிவான சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, அவர்களிடம் இருந்த எட்டு பயணப் பெட்டிகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன. அப்போது, 12 உலோகக் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

எனினும், நீண்ட பயணம் மற்றும் போதிய பராமரிப்பின்மை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், 8 புறாக்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட புறாக்களின் மொத்த சந்தைப் பெறுமதி 34 இலட்சத்து 31 ஆயிரத்து 400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், சுங்கச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், ஒரு சகோதரருக்கு 4 இலட்சம் ரூபாய் அபராதமும், மற்றொரு சகோதரருக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிருடன் மீட்கப்பட்ட 56 புறாக்களை மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டவிரோதமாக உயிரினங்களை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.