பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இன்று வெள்ளிக்கிழமை டெல்லி வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, சக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிரம்மோஸ் ஏவுகணை மேம்பாடுகள் போன்ற பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் புதிய சிவில் அணு உலைகளை அமைப்பதற்கான இந்தியாவின் திட்டங்கள் உள்ளிட்ட மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். அத்துடன், புதுடெல்லியில் நடைபெறும் இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் புடின் கலந்துகொள்ளவுள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடியும் புடினும் சந்தித்திருந்தனர். அப்போது ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்துக் குறிப்பிட்ட இந்தியப் பிரதமர், நாம் முடிவில்லாத போர் என்ற சூழ்நிலையிலிருந்து போரின் முடிவு என்பதை நோக்கி நகர வேண்டும் என்றும், இந்தப் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மனிதகுலத்தின் விருப்பம் என்றும் ரஷ்ய தலைவரிடம் வலியுறுத்தியிருந்தார்.