இலண்டன் ப்ளம்ஸ்டெட்டில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 30 வயது நபர் கடுமையாக காயமடைந்து ஏர்லிஃப்ட் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தாக்குதல் மேற்கொண்ட நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தென் கிழக்கு லண்டனின் ப்ளம்ஸ்டெட் பகுதியில் அமைந்துள்ள புனித மார்கரெட்ஸ் டெரஸ் குடியிருப்பு தெருவில் நடந்த கத்திக்குத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில் தாக்குதல் நடந்ததாக தகவல் கிடைத்ததுடன், அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. காயமடைந்தவர் 30 வயதுடைய நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த இலண்டன் ஏர் ஆம்புலன்ஸ் குழுவினர், காயமடைந்த நபருக்கு உடனடி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் அவசரமாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் அவரது நிலையை உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 20 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தாலும், தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் அவர் மீது மேலதிக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டார்.
இதனால் உண்மையான குற்றவாளியை கண்டறிய பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து பகிருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இலண்டனில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள் மீண்டும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.