ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அடுத்த வாரமளவில் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கட்சி மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளன.
அந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அடுத்த கட்டமாக எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசனேவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் தீர்க்கமான ஒரு சந்திப்பு நடைபெற்றிருந்தது.
அதன் பின்னரே கடந்த 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார். எப்படியிருப்பினும் பரந்துபட்ட கூட்டணி அமைப்பது தொடர்பில் சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் பேச்சுவார்த்தைகளை கடந்ம காலத்தில் நடத்திய போது அவற்றில் முழுமையான இணக்கப்பாடு எட்டப்படவில்லை.