மோடியுடன் பேச்சுவார்த்தை -இந்தியா சென்றார் பசில்..!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன் பெற்றுக்கொள்வது மற்றும் அபிவிருத்தி விடயங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்படும் என அறியமுயடிக்கின்றது.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவியேற்ற நிலையில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் அடுத்த ஆண்டு உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில், பசில் ராஜபக்ஷ தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அடுத்த வாரம் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு துறைமுக முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான முத்தரப்பு ஒப்பந்தத்தை இந்த இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை ஒருதலைப்பட்சமாக இரத்து செய்தது.

இதன் காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கோரப்பட்ட கடன் மற்றும் மே மாதத்தில் 1.1 பில்லியன் டொலர் நாணய பரிமாற்ற கொள்கைக்கு புதுடில்லி இன்னும் பதில் வழங்கவில்லை.

இவ்வாறான நிலையில் அதற்கு சமரசம் செய்யும் வகையில் கொழும்பு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொள்ள தனியார் முதலீட்டாளரான அதானி குழுமத்தை இணைக்க இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தது.

இதேவேளை எரிபொருளுக்காக இந்தியாவிலிருந்து கடனைப் பெறுவதற்கான முன் நிபந்தனையாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இருப்பினும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது, எரிபொருளுக்காக இந்தியாவிலிருந்து கடனைப் பெறுவதற்கான முன் நிபந்தனை அல்ல என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்