இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ‘ஊழல்’ என்ற குற்றத்தை இழைத்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் நிஷாந்த பண்டார பஸ்நாயக்க என்பவரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி திங்கட்கிழமை (26) உத்தரவு பிறப்பித்தார்.
வழக்கின் முதலாவது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் அப்போதைய இணைப்புச் செயலாளராக இருந்த நிஷாந்த பண்டார பஸ்நாயக்க என்ற மூன்றாவது சந்தேகநபரின் பெயரில் திறக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கில் அமைச்சின் பணம் வைப்பிலிடப்பட்டிருந்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளான அமாலி ரம்புக்வெல்ல தவறாகப் பயன்படுத்தியதாகவும் சந்தேகபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.
இதன்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி,
”நீதவான் அவர்களே இந்த சந்தேகநபரை வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக பெயரிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகின்றோம். சந்தேகநபர் வழக்கின் முதலாவது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இணைப்புச் செயலாளராக கடமையாற்றியுள்ளார். அமைச்சின் நிதி வைப்பிலிடப்படுகின்ற வங்கிக் கணக்கொன்று இவரது பெயரில் தனியார் வங்கியொன்றில் நடத்திச் செல்லப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்கு இவரது பெயரில் இருந்தாலும் அதனை முதலாவது சந்தேகநபரான கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளே பயன்படுத்தியதாக இவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்தார்.
இந்த வங்கிக் கணக்கில் அவ்வப்போது 20000 30000 50000 100000 ரூபா என பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இவர் அறிந்திருந்த நிலையிலேயே இவரது வங்கிக் கணக்கு வேறொரு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீதவான் அவர்களே இந்த சந்தேகநபர் இந்த குற்றத்தை புரிவதற்கு உடந்தையாக செயற்பட்டுள்ளார். இந்த மூன்றாவது சந்தேகநபர் தவறு என்பதை உணர்ந்துகொண்டே இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஊழல் என்ற குற்றத்தை செய்துள்ளார். தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுகிறது. சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இதன்போது முன்னிலையான சந்தேகநபரான முன்னாள் இணைப்புச் செயலாளரின் சட்டத்தரணி
நீதவான் அவர்களே எனது சேவைபெறுநர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அழைப்பின்றி தன்னார்வமாக சென்று ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். அவரது பெயரில் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டிருந்தது. அந்த வங்கிக் கணக்கிற்கான அனைத்து வங்கி அட்டைகளும் சந்தேகநபரான அமைச்சரின் மகளிடமே இன்னமும் உள்ளதாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.
இவரது பெயரில் வங்கிக் கணக்கு இருந்தாலும் இவர் அதனை பயன்படுத்தவில்லை. இந்த வங்கிக் கணக்கிற்கு வந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது இவருக்கு தெரியாது. எந்த வங்கிக் கணக்கிற்கு சில நபர்களின் பெயர்களில் பணம் வந்துள்ளது. எனது சேவைபெறுநர் தகவல்களை மறைக்காமல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்துள்ளார். அவரை விளக்கமறியலில் வைக்கக்கூடாது. இவரை அரச சாட்சியாளராக பயன்படுத்த வேண்டும். எனது சேவைபெறுநர் விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளார். தகுந்த பிணை நிபந்தனையின் கீழ் அவரை விடுவிக்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்
விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்ததுடன் அன்றைய தினத்தில் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறு விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வழக்கு ஜூன் 3ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஊடகத்துறை சுகாதாரம் சுற்றாடல் அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல செயற்பட்ட 2021ஃ2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது பிரத்தியேக பணிக்குழாமிற்கு பெயரளவில் மாத்திரம் 15 பேரை இணைத்துக்கொண்டு அவர்களுக்கான சம்பளம் மேலதிக நேர கொடுப்பனவு ஆகியவற்றை தமது தனிப்பட்ட செலவுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 80 இலட்சம் ரூபாவிற்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.