செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணையவேண்டும் | கருணா அம்மான்

கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணையவேண்டும் | கருணா அம்மான்

2 minutes read

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒற்றுமையாக  செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாத அபாயகரமான நிலை காணப்படுகிறது. எனவே, கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் ஆகியோர் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட கிழக்கு தமிழ் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கருணா அம்மான் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இதை சிறந்த நிகழ்வாக பார்க்கின்றோம். இது குறுகியகால அரசியல் அல்ல. ஒரு நீண்டகால வெற்றிப் பயணமாக மாற்றி அமைக்கப்பட வேண்டிய தேவைப்பாட்டை உருவாக்குபவர்களாக நீங்கள் சத்திய பிரமாணம் எடுத்துள்ளீர்கள்.

இருக்கின்ற சபைகளிலே அநீதிகளை தட்டிக் கேட்பவர்களாகவும் மக்களுக்கு சேவையாற்றுபவர்களாகவும் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தொடர்பான கொள்கைகளை மக்களுக்கு கொடுப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கியதன் நோக்கம் வெறும் பதவி பட்டங்களுக்காக அல்ல. எங்களது கிழக்கு மாகாண மக்கள் உரிமையுடனும் தற்துணிவுடன் காத்திரமான தியாகத்துடன் வாழவேண்டும் என்பதற்காக.

கிழக்கு மாகாணம் மூவினங்களும் செறிந்து வாழும் இடம். எனவே தமிழ் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் நிச்சயமாக ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாது. ஆகவே தான் கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுள்ளோம்.

இதில் பதவி ஆசை பட்டம் போன்றவற்றுக்காக செயற்படுவதாக இருந்தால் கிழக்கு மாகாணம் பறிபோவது என்பது உறுதியான விடயம். இதனை மக்கள் உணர்ந்துகொண்டிருக்கின்றனர்.

ஆகவே ஆரம்பத்தில் கூறியிருந்தோம்… தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்துகொள்ளுங்கள் என. இந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்தால் 12 சபையில் தமிழர்கள் ஆட்சி அமைக்க முடியும். இதை தான் வெளிப்படையாக கூறியிருந்தோம்.

இப்போது அரசாங்கமும் அழைப்பு விடுத்துள்ளது. எனவே யார் முன்வருகின்றார்களோ, எங்களுக்கு சாதகமான பேச்சுவார்த்தை நடாத்தி நாங்கள் அந்த ஆட்சியை அமைப்பதற்கு உதவி செய்வோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

வட மாகாணத்தை எடுத்துக்கொண்டால் இன்று ஆட்சி அமைப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்த கஜேந்தரகுமாரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது. அவ்வாறே டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் சந்தித்துள்ளார். அதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. அதில் வேடிக்கையான விடயம் ஒட்டுக்குழு, தலைவரை சந்தித்ததாக கூறப்பட்டதேயாகும்.

அவரும் மக்களுக்காக போராட்டத்துக்காக ஆயுதம் தூக்கி வந்த தலைவர்தான். அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து சேவையாற்றி வந்தவர். ஆகவே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சிவஞானம் துணிந்து சென்று டக்ளஸுடன் பேசி ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை வரவேற்கின்றோம். இது போன்று எதிர்காலத்தில் நாங்கள் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.

அதை தான் கிழக்கு மாகாணத்தில் எதிர்பார்க்கின்றோம். வேடிக்கை என்னவென்றால் யுத்தம் நடந்த காலத்தில் யுத்தத்தை விமர்சித்தவர்கள் அல்லது யுத்தத்தில் இருந்து தப்பி ஓடியவர்கள் தற்போது தேசியவாதிகளாக மாற்றமடைந்துள்ள அவர்கள்தான் தேசியத்தை பற்றி அதிகமாக பேசுகின்றனர்.

உண்மையில் களத்தில் இருந்த போராளிகள் இன்று துரோகிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். எனவே களத்தில் நின்ற எத்தனையோ போராளிகள் கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் வெற்றி அடைந்துள்ளனர் என்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.