பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 திகதி காலை கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சட்டத்தரணி போல் வேடமிட்டு வந்த சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என்ற நபரே துப்பாக்கிச்சூடு நடத்தி இருந்தார். சம்பவ தினத்தன்றே அவர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹேல்பத்ர பத்மேயின் உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு உதவி புரிந்த பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எனினும், சட்டப் புத்தகத்துக்குள் துப்பாக்கியை மறைத்து, அதனை நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வந்த இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்தார். அவரைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அவர் கடல் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார் என புலனாய்வுத் தகவல் கிடைக்கப் பெற்றது.
இந்தநிலையில், அண்மையில் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹேல்பத்ர பத்மே உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இஷாரா செவ்வந்தி, நேபாளத்தின் காத்மண்டு நகரை அண்மித்த பகுதியில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இஷாரா செவ்வந்தியும் மேலும் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழு ஒன்று, நேபாள பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர்களைக் கைது செய்துள்ளது.
கெஹேல்பத்ர பத்மேவுடன் செயற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே.பாய் என்பவரின் உதவியுடன் இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டு நான்கு நாள்களின் பின்னர், இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குக் கடல் வழியாகத் தப்பிச் சென்றுள்ளதுடன், அங்கு மூன்று வாரங்கள் தங்கியிருந்துள்ளார்.
அதன் பின்னர் இந்தியாவில் இருந்து அவர் நேபாளத்துக்குச் சென்று தலைமறைவாகி இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இஷாரா செவ்வந்திக்காகக் கெஹேல்பத்ர பத்மே பல இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.