செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணியற்ற மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம்

காணியற்ற மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம்

1 minutes read

புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று  பிரதேசத்தை சேர்ந்த காணியற்ற மக்கள், சிவில் அமைப்புகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (5) மாலை  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம்  மற்றும் கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவுகளில்  பாரியளவில் காணிகள் அடாத்தாக பிடித்த 75 பேருக்கு எதிராக பிரதேச செயலகத்தினால் குறித்த காணிகளிலிருந்து வெளியேறுமாறு “அ” படிவம்  ஓட்டப்பட்டது. இந்நிலையில் 5 பேர் காணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

எஞ்சிய 70 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பிரதேச செயலகத்தினால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த காணிகளை  பிடித்தவர்கள் சிலர் 27.01.2026 அன்று  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றபோது மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி பிரதேச செயலாளர் மற்றும் குறித்த பகுதி கிராம அலுவலர் ஆகியோருக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டபோதும் அங்கு அடாத்தாக காணி பிடிக்கப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உரிய வகையில் ஏற்கனவே அவர்களுக்கு காணி இருக்கும்போது இன்னொரு காணி பிடிக்கின்றார்கள் எனில் அதற்குரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த அடாத்தாக காணி பிடித்த நபர்கள் பிரதேச செயலாளரை மாற்றுமாறும் கிராம அலுவலரை  மாற்றுமாறும் கோஷமிட்டு போராட்டத்தை முன்னெடுத்ததன் பின்னணியில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று  பிரதேசத்தை சேர்ந்த காணியற்ற மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள்  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாயமான முறையில் செயற்படுகின்ற பிரதேச செயலாளரை மாற்றக்கூடாது எனவும் அவர் எங்களுக்கு வேண்டும் எனவும் தொடர்ச்சியாக காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு அவர் நியாயமான முறையிலே நடவடிக்கை எடுக்கிறார் என்றும் அதனை செயற்படுத்த அவருக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் அவரை மாற்றம் செய்யக்கூடாது என்றும்  போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் இறுதியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) எஸ். மஞ்சுளாதேவி மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி)  எஸ்.ஜெயகாந்தன் ஆகியோரிடம் தங்களுடைய மகஜரை கையளித்து காணியற்றவர்களுக்கு காணி வழங்குமாறும் பிரதேச செயலாளர் மேற்கொள்ளும் நியாயமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவேண்டும் எனவும் அடாத்தாக காணி பிடித்தவர்களின் செயற்பாடுகளுக்கு துணைபோக வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.