செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரில் ஆராய்வு

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரில் ஆராய்வு

1 minutes read

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய கட்டுமானப் பணிகளை நேரில் கண்டறிவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க  கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, தற்போது கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயணிகள் முனையக் கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்த அமைச்சர், 800 சதுர மீற்றருக்கும் அதிக பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் புதிய வருகை முனையத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், தற்போது பயன்பாட்டிலுள்ள முனையத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்ற அவர், அங்குள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

கடந்த 2025 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 53,443 பயணிகள் பயணம் செய்துள்ளமை ஒரு பாரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

தற்போது இந்தியாவின் சென்னைக்கு தினசரி விமான சேவைகளும், திருச்சிக்கு வாரத்திற்கு மூன்று முறை விமான சேவைகளும் இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.

வடபகுதிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் மூலம் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தவும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனை ஊக்குவிக்கும் வகையில், விமான நிறுவனங்களுக்கு விமானம் தரையிறக்கம் மற்றும் தரித்துநிற்பதற்கான கட்டணச் சலுகைகள் வழங்கப்படுவதுடன், பயணிகளுக்கான விமான நிலையப் புறப்பாட்டு வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் உள்நாட்டு விமான சேவைகளையும் மேம்படுத்தி, சுற்றுலாத் துறையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த விஜயத்தின் போது பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, விமான நிலைய உதவி செயல்பாட்டு மேலாளர் அநுத் தயாவங்ச, பணிப்பாளர் பிரீமால் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.