செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் விரைவில் கூட்டப்படவேண்டும்

தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் விரைவில் கூட்டப்படவேண்டும்

1 minutes read

மாகாணசபைத்தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் இழுத்தடிக்கப்படாமல் விரைவில் கூட்டப்படவேண்டும் எனவும், சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான முன்மொழிவை இத்தெரிவுக்குழு மேற்கொள்ளவேண்டும் எனவும் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாகாணசபைத்தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அதுகுறித்த விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் 12 பேரடங்கிய விசேட செயற்குழு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் நியமிக்கப்பட்டது.

இந்நோக்கத்துக்காக விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதாக அரசாங்கம் அறிவித்து சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னர் நியமிக்கப்பட்டுள்ள இக்குழு தொடர்பில் கருத்துரைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இச்செயற்குழுவுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

இக்குழுவில் அங்கம் வகிக்கும் எமது கட்சி உறுப்பினர் இரா.சாணக்கியன், செயற்குழுவின் முதலாவது கூட்டம் விரைவாகக் கூட்டப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். எனவே இத்தெரிவுக்குழுவை நியமிப்பதில் இழுத்தடிப்பு நிலவிய போதிலும், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இழுத்தடிப்பின்றி துரிதமாக முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்களை பழைய முறைமையில் நடாத்துவதற்கான தனிநபர் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் முன்வைத்த சாணக்கியன் இக்குழுவில் அங்கம் வகிக்கும் நிலையில், அவரது தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான முன்மொழிவை இத்தெரிவுக்குழு மேற்கொள்ளவேண்டும். அதனூடாக அப்பிரேணை துரிதமாக நிறைவேற்றப்பட்டு, மாகாணசபைத்தேர்தல்கள் பழைய முறைமையில் விரைவாக நடாத்தப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை இத்தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னரும், அதில் தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனத் தெரிவித்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், இது மாகாணசபைத்தேர்தல்களைக் காலதாமதப்படுத்துவதற்கான வெறும் இழுத்தடிப்பு வேலை மாத்திரமே என விசனம் வெளியிட்டார்.

கடந்த காலங்களில் நான் பல்வேறு தெரிவுக்குழுக்களில் அங்கம் வகித்திருப்பதனால் இதனை நன்கறிவேன். தற்போது 3 மாத கால அவகாசத்துடன் நிறுவப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவின் கால அவகாசம் பின்னர் மேலும் நீடிக்கப்படும்.

எனவே அரசாங்கம் உண்மையிலேயே மாகாணசபை முறைமையில் ஈடுபாடு கொண்டிருப்பின், தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தனிநபர் பிரேரணையை நிறைவேற்றி, பழைய முறைமையில் தேர்தலை உடனடியாக நடாத்தவேண்டும்.

அதன் பின்னர் அடுத்த தேர்தல் வரையான காலப்பகுதியில் எல்லை நிர்ணயம் உள்ளடங்கலாக புதிய முறைமையில் தேர்தலை நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அதனைவிடுத்து, தேர்தலைக் காலதாமதப்படுத்துவதற்கு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.