செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை மீட்கும் முயற்சி ; 21ஆம் திகதி நீதிமன்ற கட்டளை

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை மீட்கும் முயற்சி ; 21ஆம் திகதி நீதிமன்ற கட்டளை

1 minutes read

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி வழங்கப்படும் என நீதிமன்று திகதியிட்டுள்ளது.

குறித்த விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி காணப்படுகிறது. குறித்த வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த 28ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது.

அதனை அடுத்து குறித்த வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும் , தவறும் பட்சத்தில் பிரதேச சபை வேலியை அகற்றும், வேலியை அகற்றும் செலவீனத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்து இருந்தார்.

அதனை அடுத்து பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாக பலாலி பொலிஸ் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் , தவிசாளரை பலாலி பொலிஸார் அழைத்து, வேலியை அகற்றினால் , இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு , நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவே வேலியை  அகற்றும் பணிகளை கைவிட வேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளனர்.

அதற்கு தவிசாளர், மறுப்பு தெரிவித்து , பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விகாராதிபதியே அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் , வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியாக கூறி இருந்தார்.

அந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வலி . வடக்கு பிரதேச சபை வீதியை மீட்கும் பணியை கைவிட வேண்டும் என்றும் , அதற்கு எதிராக நீதிமன்று தடையுத்தரவு வழங்க வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணையின் போது, ஒரு தலைப்பட்சமாக விசாரணை செய்ய முடியாது என கூறிய மன்று , வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை  இன்றைய தினம் திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதன் பிரகாரம் தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் இன்றைய தினம் மன்றில் முன்னிலையான நிலையில் , அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

அதனை அடுத்து குறித்த வழக்கின் மீதான கட்டளைக்காக எதிர்வரும் 21ஆம் திகதி நீதிமன்று திகதியிட்டுள்ளது.  அதேவேளை இன்றைய தினம் முறைப்பாட்டாளரான விகாராதிபதி மன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை. அவர் சார்பில் பொலிஸார் மன்றில் வாதங்களை முன் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.