செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் | கோரி ரவிகரன் அரச அதிபருக்குக் கடிதம்!

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் | கோரி ரவிகரன் அரச அதிபருக்குக் கடிதம்!

1 minutes read

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலாளரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குறித்த பகுதியில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலை குறித்தும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு 2026.06.29 அன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு கோரப்பட்டுள்ளது.

அந்த வகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறி உப்பளம் அமைப்பதைத் தடுத்தல் மற்றும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தல் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து வினவல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கடந்த மார்ச் 12 அன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் கௌரவ விவசாய, கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் அவர்களின் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொக்குத்தொடுவாய் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத உப்பள நிருமாணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காணும் பொறுப்பு முல்லைத்தீவு மாவட்ட நிருவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அத்துமீறலுக்கு உள்ளாகும் காணிகள் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நில அளவை திணைக்களத்தின் மூலம் எல்லைகளை அடையாளப்படுத்துமாறு கடந்த மார்ச் 30 அன்று மாவட்டச் செயலாளருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த விடயம் ஏப்ரல் 08 அன்று மேலதிக நடவடிக்கைக்காகக் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்குப் பாரப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை அது குறித்து எவ்வித அடுத்தகட்ட நிருவாக நடவடிக்கைகளோ அல்லது முன்னேற்ற அறிக்கைகளோ சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

அப்பகுதி மக்களின் பூர்வீகக் காணிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அத்துமீறி மேற்கொள்ளப்பட்டு வரும் உப்பள நிருமாணப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கு மாவட்ட நிருவாகத்தினால் எடுக்கப்பட்ட நிருவாக நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், பொதுமக்களுக்குச் சொந்தமான காணி எல்லைகளை முறைப்படி நில அளவை செய்து அடையாளப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் இக்கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் நில உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மாவட்ட நிருவாகத்தின் நேரடித் தலையீடு இன்றியமையாதது என்பதால், இது தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்த விரிவான விளக்க அறிக்கையொன்றை விரைவாக வழங்குமாறு மாவட்டச் செயலாளரிடம் இக்கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.