வாஷிங்டன்:
ரஷியா-உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முதலில் உக்ரைன் எதிர்ப்பு தெரிவித்தது.
ஏனெனில் உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குவதற்கு அந்த நாடு உதவியாக இருந்தது. அந்நாட்டு ராணுவ தளத்தில் இருந்தும் ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
பெலாரஸ் நேரடியாக போரில் பங்கேற்காவிட்டாலும் ரஷியாவுக்கு தனது மறைமுக ஆதரவை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் பெலாரஸ் படைகளை அனுப்பலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பெலாரஸ் அதிபர் தனது நாட்டை ரஷியாவுக்கு ஆதரவாக போரில் களம் இறக்குவது குறித்து முடிவு செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ரஷியா – உக்ரைன் இடையே நடைபெறும் பேச்சு வார்த்தையின் முடிவை பொறுத்து பெலாரஸ் படைகளை அனுப்பலாம்’ என்றார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருவதால் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே ரஷியாவின் அணு ஆயுதங்களை உச்சக்கட்ட தயார் நிலையில் வைத்திருக்க அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள் மிகக் கடுமையான சவால்களை விடுத்து வருவதால் புதின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.