கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாருடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
‘கரவிட்ட சியா’ என்ற புனைப்பெயர் கொண்ட நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் உள்ள கடையொன்றின் உரிமையாளரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கடை உரிமையாளரின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் இரு சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
அதனடிப்படையில் குறித்த சந்தேகநபர் ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் தங்கியிருக்கின்றார் என்று கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கையைப் பொலிஸார் ஆரம்பித்தனர்.
அந்த நடவடிக்கையின் போது சந்தேகநபர் பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்.
அந்தவேளை பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் பலத்த காயமடைந்தார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
பலத்த காயமடைந்த சந்தேகநபர் அவிசாவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.