செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணி வர்த்தமானி எப்போது இரத்தாகும்? கஜேந்திரகுமாருக்கு நீதி அமைச்சர் தெரிவித்த பதில் என்ன?

காணி வர்த்தமானி எப்போது இரத்தாகும்? கஜேந்திரகுமாருக்கு நீதி அமைச்சர் தெரிவித்த பதில் என்ன?

1 minutes read

வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யப்படும் திகதி தொடர்பில் காணி அமைச்சர் லால் காந்தவுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிவிப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணிகள் 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்த வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி வலுப் பெற்ற எதிர்ப்பை அடுத்து, அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதனை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

அதேபோன்று பிரதமருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது காணி அமைச்சர் லால் காந்தவால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது இந்த விவகாரம் பற்றி எந்தவொரு விசேட கூற்றும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த வர்த்தமானி அறிவித்தல் எப்போது இரத்துச் செய்யப்படும் எனக் குறித்த திகதியொன்றை அறிவிக்குமாறு குறுந்தகவல் ஊடாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் தான் கோரியிருப்பதாகவும், இது பற்றி நேற்று திங்கட்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் பேசவிருப்பதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த சனிக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இது பற்றி கஜேந்திரகுமார் எம்.பியிடம் ஊடகங்கள் வினவியபோது, இந்த விடயம் தொடர்பில் காணி அமைச்சர் லால் காந்தவுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது குறுந்தகவலுக்குப் பதில் அனுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளருக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும், அவரும் இது குறித்து உடனடியாக ஆராய்வதாக உறுதியளித்திருப்பதாகவும் கஜேந்திரகுமார் எம்.பி. கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.