இந்திய பொருட்கள் மீது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி, இன்று (27) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு, சிக்கலில் உள்ளது.
ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்தியாவுக்கு வரியைக் கூட்டுவதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
வரி விவகாரத்தில் எந்த மாற்றமோ முன்னேற்றமோ ஏற்படும் என்ற நம்பிக்கை இல்லை என்று இந்திய வர்த்தக அமைச்சு அதிகாரி கூறியுள்ளார்.
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிதி உதவி வழங்க வர்த்தக அமைச்சு உறுதியளித்திருக்கிறது.
ஏற்றுமதியாளர்கள் சீனா, மத்தியக் கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய வட்டாரங்களுக்குப் பொருள்களை விற்க, கூடுதல் ஊக்கத்தொகையையும் அமைச்சு வழங்கவிருக்கிறது.
ஆனால், இந்திய ஏற்றுமதியாளர்களின் அச்சம் குறையவில்லை. கிட்டத்தட்ட 55 சதவீத அமெரிக்க ஏற்றுமதிகள் வரிகளால் பாதிக்கப்படக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இந்திய ஏற்றுமதிகள் 20இலிருந்து 30 சதவீதம் வரை குறையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.