ஐரோப்பிய நாடுகள் கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பிரான்ஸில் கோடைகாலம் தொடங்கியதிலிருந்து காட்டுத்தீ சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் பதிவான காட்டுத்தீ சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 183 பேர் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் வேண்டுமென்றே காட்டுத்தீயை ஏற்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எஞ்சியவர்கள் தற்செயலாக தீ ஏற்படுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குரோஷியாவின் பிரபல சுற்றுலாத் தலமொன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
மேற்கு ஜெர்மனி மற்றும் தென்மேற்கு பிரான்ஸில் காட்டுத்தீ வேகமாகப் பரவியதால், கிராமப்புறங்களில் வசித்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
அதேபோல், கிரேக்கத்தில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியமும் கண்டம் முழுவதும் பல பகுதிகளில் மிகவும் அதிக காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து நிலவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடும் வெப்பநிலை, வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால் காட்டுத்தீ வேகமாகப் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகள் தீயைக் கட்டுப்படுத்தவும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.