வங்காள விரிகுடாவில் ஒடிசா கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் பனாமா நாட்டுக் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“MV Ocean-Winner” என அடையாளம் காணப்பட்ட குறித்த சரக்குக் கப்பல், கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி இரவு சுமார் 10.30 மணியளவில், ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
கப்பலில் சுமார் 1,700 தொன் இரும்புத் தாது ஏற்றிச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பல் வங்காள விரிகுடாவில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் நேரத்தில் கப்பலில் மொத்தம் 24 பணியாளர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில், 20 பேர் சீனப் பிரஜைகள், 3 பேர் மியான்மர் பிரஜைகள் மற்றும் 1 பேர் பங்களாதேஷ் பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டமை தொடர்பாக இந்தியாவின் ஸ்ரீ விஜய புரத்தில் அமைந்துள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) ஓகஸ்ட் 23ஆம் திகதி இரவு 11.48 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை இயக்கும் நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம் தேடல் மற்றும் மீட்பு உதவி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு இந்திய கடலோரக் காவல்படையும் இந்திய கடற்படையும் இணைந்து கூட்டு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
மீட்புப் பணிகளுக்காக தற்போது மூன்று கடலோரக் காவல் படகுகள் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், விபத்துக்குள்ளான கப்பல் இருக்கக்கூடிய பகுதிக்கு அருகில் பயணிக்கும் ஏனைய கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியாளர்களின் நிலை தொடர்பில் தெளிவில்லை
எனினும், கப்பலில் இருந்த 24 பணியாளர்களில் இதுவரை எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பில் அதிகாரப்பூர்வமான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
கப்பல் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் குறித்தும் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
தொடர்ந்து கடலோரக் காவல்படை மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைகளின் அடிப்படையில், கப்பலில் இருந்த பணியாளர்களின் நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.