செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா டாக்ஸிக் | திரைவிமர்சனம்

டாக்ஸிக் | திரைவிமர்சனம்

2 minutes read

தயாரிப்பு : கே.வி.என் புரொடக்ஷன்ஸ் & மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்

நடிகர்கள் : யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா, சுதேவ் நாயர் மற்றும் பலர்.

இயக்கம் : கீது மோகன் தாஸ்

மதிப்பீடு : 2.5/5

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும்’ டாக்ஸிக்’ திரைப்படத்தை காண பட மாளிகைக்கு வருகை தந்த ரசிகர்களுக்கு படக்குழுவினர் ‘டாக்ஸிக்’கான அனுபவத்தை வழங்கினார்களா? அல்லது இனிமையான அனுபவத்தை வழங்கினார்களா? என்பதை தொடர்ந்து காண்போம்.

சர்வ தேச சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்து எப்படி உல்லாசத்தின் சொர்க்கபுரியாக இருக்கிறதோ…! அதேபோல் இந்தியாவில் உல்லாசத்திற்கான சொர்க்கபுரியாக இருக்கும் கோவாவில்.. சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டு, நிழல் உலக மாஃபியாவாக இயங்கும் சால்வடார் ( டேரல் டி சில்வா) என்ற தலைவனுக்கு கீழ் ராயா ( ரஷ்) – கங்கா ( நயன்தாரா) எனும் அக்காவும், தம்பியும் பணியாற்றுகின்றனர்.

தம்பியை, ‘இந்த கோவாவில் நீதான் மாஃபியா தலைவனாக வரவேண்டும். ஆதிக்கம் செலுத்த வேண்டும்’ என்று உசுப்பேத்தி விட… வரலமுறையில்லாத வன்முறையில் ஈடுபட்டு, தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்துகிறார் ராயா.

ராயாவின் கட்டற்ற வளர்ச்சியை உடனிருந்து பார்த்த சால்வடார்- தனது மகள் ரெபாக்கா( தாரா சுதாரியா)வை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் தருணத்தில்.. ஒருவரை தீர்த்து கட்டுவதற்காக சர்க்கஸ் கூடாரத்திற்கு செல்லும் ராயா – அங்கு சர்க்கஸ்காரியாக – சாகசத்தை காட்டும் நாடியா ( கியாரா அத்வானி)மீது நாட்டம் கொள்கிறார்.

இந்த நாட்டம் காதலாகி.. குழந்தை பெற்றுக் கொள்ளும் வரை செல்கிறது. இதனால் ரெபாக்கா.. ராயாவை வெறுக்கத் தொடங்குகிறார்.  நிழல் உலகத்தில் ராயாவிற்கு எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க… அதில் எலிசபெத் ( ஹூமா குரேஷி) என்பவர் ..ராயாவின் பலவீனமான நாடியாவையும், கங்காவையும் பணய கைதியாக சிறைபிடித்து, நாடியா மூலமாகவே கங்காவை தீர்த்து கட்டுகிறார்.

இதனால் நாடியா மீது வெறுப்பை உமிழும் ராயா.. ‘தன் இறுதி மூச்சு உள்ளவரை உன்னை சந்திக்க மாட்டேன்’ என நாடியாவிடம் கூற… நாடியாவிற்கு டிக்கெட் ( யஷ்)என்ற மகன் பிறக்க… இந்தத் தருணத்தில் ராயா வேறொரு விடயமாக மீண்டும் நாடியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க அதை உணர்ந்த நாடியா.. விபத்தை ஏற்படுத்தி அதில் மரணம் அடைகிறார்.

இதனால் டிக்கெட் … ராயாவை வெறுக்கிறார். ஆனால் சூழல் காரணமாக ராயாவும், டிக்கெட்டும் சந்தித்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் இந்த படத்தின் கதை. நிழல் உலகம் – சட்ட விரோத காரியங்கள்-  துரோகம்- சூழ்ச்சி- சதி-  வரைமுறையற்ற உறவு – அதீத காமம் – அதீத வன்முறை – இவற்றின் ஆக்கிரமிப்பால்… ரசிகர்களுக்கு ஏதோ தவறுதலாக படமாளிகைக்கு வந்து விட்டோமோ..! என்ற எண்ணம் ஏற்படுகிறது.

ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம்… பிரமிப்பு… இருந்தாலும், அதன் மூலமாக கிடைக்க வேண்டிய அற்புதமான பட மாளிகை தருணங்கள் மிக மிக குறைவு.  முதல் பாதியில் ராயா கதாபாத்திரம்,’ என் தாய்மொழி வன்முறை. இது சர்வதேச மொழி’ என சொல்லும் இடத்தில் மட்டும் ரசிகர்களுக்கு வியப்பு கிடைக்கிறது. ஆனால் இவை ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது.

காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருந்தாலும்.. அதற்கான எழுத்தும், திரை மொழியும் வலிமையாக இல்லை என்பதால்… ரசிகர்களுக்கு சோர்வை கடந்து எரிச்சலும் உண்டாகிறது. அதிலும் மூன்றேகால் மணி நேரம் என்பது மிக மிக நீளம். இதில் 45 நிமிட காட்சிகளை நீக்கி, இதனை சுருக்கமாகவும்… அடர்த்தியாகவும்… சொல்லப்பட்டிருந்தால் ஒருவேளை ரசிக்கக்கூடிய படைப்பாக மாறி இருக்கலாம்.

திரை முழுவதும் ராயாவாகவும்… டிக்கெட்டாகவும்… நடிகர் யஷ்ஷின் ஆளுமையும்… ஆக்கிரமிப்பும்… ஒரு எல்லைக்குப் பிறகு… போரடிக்கிறது.

நயன்தாரா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா ஆகியோரை விட நாடியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கியாரா அத்வானி…. ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கிறார். திரையில் அவருடைய கண்கள் அற்புதமாக பேசுகிறது. பல வகையான உணர்வுகளை கடத்துகிறது.

பெண் இயக்குநர் என்பதால்  காதல் காட்சிகளிலும்.. காமம் கொப்பளிக்கும் காட்சிகளிலும் ..வித்தியாசமான கோணங்களில் படமாக்கி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் வியக்க வைக்கிறார் கீது மோகன் தாஸ். ஆனால் கதை சொல்லலில் படு சொதப்பல். இத்தகைய எளிமையான கதைக்கு.. இவ்வளவு நீள திரைக்கதை வீண்.

ராயா கதாபாத்திரம் மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரமாக மாறுவதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி – பின்னணி இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- இருவரும் தங்களுடைய கடினமான உழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்கள். ஒளி மற்றும் ஒலி அமைப்பு சர்வதேச தரத்தில் இருக்கிறது.

நிழல் உலக மனிதர்களுக்கும்.. சாதாரண அறம் சார்ந்த வாழ்க்கையை வாழும் மனிதர்களுக்கும்.. இடையேயான மனம் என்பது அன்பால் மட்டுமே நிறைந்தது. அதில் பற்றாக்குறையோ.. முரண்பாடோ.. நிகழ்ந்தால்…. அதை எதிர்கொள்வது கடினம் என்பதை, புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு குழப்பமான திரைக்கதையால் விவரித்திருப்பது படைப்பை பலவீனப்படுத்தியிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.