மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் .

மகேஷ் பாபு நடிக்கவுள்ள ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு, விஜயசாந்தி, ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சரிலேரு நீக்கெவரு’. பொங்கல் விடுமுறைக்கு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு இருந்தது.

இதனைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் அடுத்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இறுதியாக ‘கீதா கோவிந்தம்’ இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மகேஷ் பாபு. தனது தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாளன்று, இதனை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்தார்.

‘சர்காரு வாரி பாட்டா’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நாயகியாக நடிக்க பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக இதில் மகேஷ் பாபுவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மகேஷ் பாபுவுடன் கீர்த்தி நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

‘சர்காரு வாரி பாட்டா’ படத்தை 14 ரீல்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன.

ஆசிரியர்