ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்து கொண்டார்.
இதில் அவர் பேசும் போது, “மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால் சென்சார் பிரச்சனை வருவது இயல்பானதுதான்.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள்.
அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜயை என்ன என்ன செய்தார்களோ, அந்த படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை… விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீசுவரர். பணம் அதிகம் சேர்த்துள்ளவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம் என்றார்.