அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநரும், நடிகருமான அமீர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘ஆன்ட்டி இந்தியன்’ எனும் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்த திரைப்படத்தில் இயக்குநரும், நடிகருமான அமீர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை சாந்தினி ஸ்ரீதரன், நடிகர்கள் ராஜ் கபூர், மாரிமுத்து, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள்.

தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். எழுத்தாளர் அஜயன் பாலா மற்றும் பால முரளி வர்மன் இணைந்து வசனம் எழுதி இருக்கிறார்கள். தமிழக அரசியலையும், இந்திய அரசியலையும் மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் ஆதம் பாவா தயாரித்திருக்கிறார். இதனை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அமீருக்கு பிறந்தநாள் என்பதால், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக பட குழுவினர் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஃபர்ஸ்ட் லுக்கில் இயக்குநர் அமீர் அரசியல்வாதி போல் வெள்ளுடையில், கைகளை உயர்த்தி வணங்குவது போன்றும், அதன் பின்னணியில் அரசியல் கட்சிகளின் கொடிகளும், தமிழக அரசின் தலைமைச் செயலகமும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே பேரார்வத்தை உண்டாக்கி இருக்கிறது.

ஆசிரியர்