இந்த வார ஞாயிறு வீட்டில் சிக்கன் வாங்கப் போகிறீர்களா? அதையும் வழக்கமான குழம்பு அல்லது வறுவலாக இல்லாமல், சுவை வெடிக்கும் புதிய ஸ்டைலில் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை ஸ்டைல் சிக்கன் தொக்கு உங்கள் சமையலறையில் கட்டாயம் ட்ரை செய்ய வேண்டிய ரெசிபி!
அசைவ உணவுகளுக்குப் பெயர் பெற்ற மதுரை ஸ்டைலில் செய்யப்படும் இந்த சிக்கன் தொக்கு, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என எதுடன் சேர்த்தாலும் அட்டகாசமாக இருக்கும். மிளகு வாசனையும் மசாலா சுவையும் கலந்த இந்த தொக்கு, காரசாரமான சுவையை விரும்புபவர்களுக்கு சரியான தேர்வு.
இந்த ரெசிபியின் சிறப்பு என்னவென்றால், அதிக சிரமமின்றி குறைந்த நேரத்தில் செய்து முடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மேரினேட் செய்ய:
சிக்கன் – அரை கிலோ
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
அரைக்க:
பிரியாணி இலை – 1
இலவங்கப்பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
வெந்தயம் – ½ ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
தொக்கு செய்ய:
கடலை எண்ணெய் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் (நறுக்கியது) – அரை கப்
பெரிய வெங்காயம் (நறுக்கியது) – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
தக்காளி (நறுக்கியது) – 1
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 2 ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக கழுவி தண்ணீரை வடிக்கவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து 10–15 நிமிடங்கள் ஊற விடவும்.
அரைக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களை மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை எண்ணெயை சூடாக்கி, அரைத்த மசாலா பொடியை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அடுத்து கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வெங்காயம் சுருங்கும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போய் தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
இப்போது ஊறவைத்த சிக்கனை சேர்த்து, அதன் நிறம் மாறும் வரை நன்றாக கிளறி வதக்கவும். அதன் பிறகு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து 2 நிமிடங்கள் மசாலா நன்றாக கலக்கும் வரை வதக்கவும்.
பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து சிக்கன் வெந்துவர கொதிக்க விடவும். 5–7 நிமிடங்களில் மசாலா கெட்டியாக ஆரம்பிக்கும். அதன் பிறகு மூடியை திறந்து மிதமான தீயில் எண்ணெய் மேலே பிரியும் வரை சமைக்கவும்.
உப்பு, காரம் சரிபார்த்து இறுதியாக கொத்தமல்லி தூவி கிளறினால், சூப்பரான மதுரை சிக்கன் தொக்கு ரெடி!
இந்த காரசாரமான சிக்கன் தொக்கு, சூடான இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை இரட்டிப்பாகும்.