இன்று சனிக்கிழமை, எல்லா பிள்ளைகளுக்கும் விடுமுறை நாள், ஆனால் ராஜுவுக்கு மட்டும் வேலை நாள், அவன் அப்பா விடுமுறை நாட்களில் அவனை workshop இழுத்துக் கொண்டு போய் விடுவார், அப்பாவிற்கு வேலை என்பது டிங்கர் என சொல்லப்படும் வாகனங்களில் இரும்பு சார்ந்த பகுதிகளை சரிசெய்யும், அதாவது அடிப்பட்டால் அதை ஒடுக்கு நீக்கி மீண்டும் பழைய வடிவம் கொண்டு வரும் வேலை, உடைந்த பகுதிகளை கேஸ் வெல்டிங் பயன்படுத்தி ஒட்ட வைக்கும் வேலை, மொத்தக்காக வாகனங்களில் கட்டமைப்புகளில் வரும் பழுதுகளை சரிசெய்யும் பணி என்று சொல்லலாம்.
ராஜுவின் அப்பா லாரி டிங்கர், லாரிகளில் மட்டுமே பார்க்கும் அனுபவம் கொண்டவர், ஒன்று இரண்டல்ல, இருபத்தைந்து வருட பணி அனுபவம் கொண்டவர். அவர் பணிபுரியும் இந்த லாரி பேட்டைக்கு 10 வயதில் அண்ணனுக்கு துணையாக வந்து சேர்ந்தவர், அன்றிலிருந்து இப்போது வரை இங்குதான் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அண்ணனிடம் சம்பளம் சேர்த்தி கேட்கவும் அவர் தனியாக நீயே வெளியே போய் ஆரம்பித்துக் கொள் என்று சொல்லி கழட்டி விட பிறகு கிருஷ்ணன் அண்ணன் மெக்கானிக் ஷாப்பில் கொஞ்சம் இடம் பிடித்து அமர்ந்தவர், இப்போதுவரை தொடர்கிறார், ஹெல்ப்ர் வேலைக்கு ஆட்கள் வைத்து கொண்டால் சம்பளம் கொடுத்து சமாளிக்க முடியாது என்பதால் அவரே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்வார், அதனாலேயே விடுமுறை நாட்களில் ராஜுவை உடனழைத்து கொள்கிறார், சிலசமயம் அப்பா மதிய உணவிற்கு சாயங்காலம் வந்து அப்படியே ராஜுவையும் அழைத்து கொண்டு போய் விடுவார். இன்றும் அவ்வாறுதான் அழைத்து செல்ல காத்திருந்தார்.
ராஜுவுக்கு அப்பாவுடன் போவது என்பது பிடிக்கும் பிடிக்காது இரண்டும் சேர்ந்துதான். அவனுக்கு பெரிதாக எல்லாம் வேலை இருக்காது, ஸ்பானர் எடுத்து தருவது, வெல்டிங் செய்ய கம்பி எடுத்து தருவது, கடைக்கு போய் டீ வாங்கி வருவது மாதிரியான சில்லறை வேலைகள்தான், சிலசமயம் மட்டும் ஏதாவது அசையாமல் இருப்பதற்காகவோ, தாங்கி பிடிப்பதற்காகவோ பிடிக்க சொல்வார், வெல்டிங் சமயத்தில் ஆடாமல் இருக்க வேண்டும், ஆடினால் வெல்டிங் சரியாக வைக்க முடியாது. இது போன்றவைகள் மட்டுமே ராஜுக்கு வேலைகள், எப்போதாவது அப்பா ராஜுவை வெல்டிங் நாசில் கொடுத்து வெல்டிங் வைத்து பழக கொடுப்பார், அப்படி கொடுத்து கொடுத்து ஓரளவு வெல்டிங் வைக்கவும் ராஜு கற்று கொண்டான்.
ராஜு பரத்தம் பிடித்தவன், பார்த்த எல்லாமே வாங்கி சாப்பிட வேண்டும் அவனுக்கு, அப்பாவுடன் வரும்போது கேட்டதல்லாம் கிடைக்கும், இப்போது 8 வகுப்பு வந்துவிட்டதால் கொஞ்சம் கேட்கும் விரும்பும் விஷயங்கள் குறைவாகி விட்டன, இளநி பார்த்தான், அப்பாவிடம் அப்போது பணம் இருந்தால் அடம் பிடித்து வாங்கி விடுவான், டீ சமயங்களில் இரண்டு போண்டாக்கள் அவன் வாய்க்குள் போய் விடும். வெங்காய போண்டா, உருளை கிழங்கு போண்டா இரண்டிலும் ஒன்றை தூக்கி விடுவான். பிறகு பரோட்டா அப்பா பணம் ஏதும் வசூல் வந்தால் வாங்கி தருவார், கூட ஆம்லெட்டும். இதெல்லாம் நல்ல விஷயங்கள் தான். ராஜுவுக்கு கெட்ட விஷயங்களும் கூட கிடைக்கும், எதாவது கஸ்டமர் கூட சண்டை என்றால், கஸ்டமரிடம் காட்ட வேண்டிய கோபத்தை அவனிடம் காட்டுவார், சாங்காலம் போவதற்குள் எப்படியாவது ஒன்றிரண்டு அடி விழுந்து விடும். இனிமேல் வரவே கூடாது, கூப்பிட்டால் வீட்டை விட்டு ஓடி விட வேண்டும் என்று திட்டமெல்லாம் போடுவான், ஆனால் அது எல்லாம் கொஞ்ச நேரம்தான், அப்பா கோபம் மறைந்ததும் டீ கடைக்கு கூட்டி போய் போனதும் ராஜு எல்லாவற்றையும் மறந்து விடுவான். ராஜுக்கு அப்பாவிடம் பிடிக்காத குணங்கள் சில இருந்தது, அதில் ஒன்று அப்பா வேலைக்கான பணத்தை மிக அதிகமாக சொல்வது, அப்பா கேட்கும் தொகை அதிகமானது என்று எண்ணுவான், அப்பா இந்த விஷயத்தில் ஏமாற்றுகாரர் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. இன்று அதில் ஒரு இடி விழுந்தது அவனுக்கு.
வழக்கம் போல நான் வரவில்லை என்று காலையில் அப்பாவிடம் போராடினான், அம்மாவிடமும் சென்று கெஞ்சினான், அவனுக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும், தெரு பிள்ளைகள் எல்லாம் பிளாஸ்டிக் பந்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது அவன் மட்டும் அப்பாவுடன் சென்று கொண்டிருப்பான். அப்பாவுடன் கூட சென்று கொண்டிருப்பதை இவனது தெரு நண்பர்கள் அணிவகுப்பு நடை என்று கிண்டல் செய்வார்கள், வீட்டின் தெரு முடியும் வரை அவனுக்கு விளையாட முடியாத ஏக்கத்துடன் இருப்பான், தெரு தாண்டி விட்டால் பிறகு பார்க்கும் விஷயங்களில் அவன் கவனம் போய் விடும், ஒவ்வொன்றும் என்ன என்ன என்று கேட்டு அப்பாவை கொன்று எடுப்பான். இன்றும் அப்படியே கேட்டபடி வேடிக்கை பார்த்தபடி லாரி பேட்டை நோக்கி அப்பாவுடன் சென்று கொண்டிருந்தான்.
லாரி பேட்டையை லாரி தொழுவம் என்று சொல்லலாம், எப்படியும் நூறு லாரிகளுக்கு மேல் இருக்கும், அதிகமும் தமிழ்நாடு, கேரளா ரெஜிஸ்டரேசன் லாரிகள், மிக சிலவை மட்டும் வேறு மாநிலங்களாக இருக்கும். லாரி புக்கிங் ஆபிஸ்கள் இங்கு மிகுதி, அதனால் உருவான இடம் இது, கூடவே லாரி பழுது பார்க்கும் workshop களும் ஏகப்பட்டது இருந்தன, வரிசையாக இருபுறமும் workshop ம் புக்கிங் ஆபிஸ்களும் மாறி மாறி இருக்கும், ஆனால் எதுவும் சாலையின் மையத்தில் இருந்து பார்த்தால் தெரியாது லாரிகள் மறித்து மறித்து நின்றியிருக்கும், வண்டி ரிவெர்ஸ் எடுக்க லாரி பின்னால் நின்று லாரி கிளீனர் போடும் சத்தம் எப்போதும் கேட்டு கொண்டிருக்கும். கிளீனரை கிளி என்றும் விளிக்கும் வழக்கம் இங்கு உண்டு.
ராஜு அப்பாவுடன் கூட நடந்து கொண்டே வண்டியின் முகப்பின் மேலிருக்கும் பெயர்ப்பலகையில் இருக்கும் ஒவ்வொரு பெயரையும் படித்து கொண்டு வருவான், சரியா என்று அப்பாவிடம் கேட்டு சரி செய்து கொள்வான், அப்பா பள்ளிக்கு 3வரைதான் போயிருக்கிறார் என்றாலும் அவருக்கு தமிழ், மழையாளம், ஆங்கிலம் எழுத படிக்க வரும், அப்பா எப்படி இதை கற்று கொண்டார் என்ற ஆச்சிரியம் ராஜுவுக்கு எப்போதும் உண்டு.
நடந்து இருவரும் அவர்களின் workshop வந்து சேர்ந்தனர், அப்பா டூல்ஸ் பெட்டியை நீக்கி ஊதுபத்தி பற்ற வைத்தார், அது சந்தன நிற கெட்டியான ஊதுபத்திகள், நின்று எரியும், அந்த வாசம் ராஜுவுக்கு பிடிக்கும், அப்பா வெல்டிங் கேஸ் உருளை செட்டை நகர்த்தி முன்னே எல்லோரும் பார்க்கும் படியாக வைத்தார், எப்போதும் யாராவது காத்திருப்பார்கள், இன்று கஸ்டமர் யாரும் அப்படி காணாததால் அப்பா முகத்தில் கொஞ்சம் கவலை தெரிந்தது. அப்பா அருகில் இருந்த லாரி பெயிண்ட்ர் அருகில் போய் அமர்ந்து அவரோட பேச ஆரம்பித்து விட்டார், ராஜுவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பிறகு அவனும் பெயிண்ட்ர் அருகில் போய் நின்று அவர் பெயர்ப்பலகை வரைந்து கொண்டிருந்ததை பார்த்தான். மயில் என பாதி எழுதி இருந்தார் ஆங்கிலத்தில், அடுத்து வாகனம் என்று வரும் என்று ராஜு அறிவான், ஏனெனில் இந்த workshop ல் வரும் பாதி லாரிகள் மயில்வாகனம் டிரான்ஸ்போர்ட்டுடையதுதான்.
கொஞ்சம் நேரம் போயிருக்கும், பனியன் போட்டு லுங்கி கட்டி சீவாத தலை கொண்ட ஒரு இளைஞன் வந்தான், டிங்கர் யாரு என்று அங்கிருந்த மெக்கானிக் கோபால் அண்ணனிடம் கேட்டான், கோபால் அண்ணன் திரும்பி அப்பாவை கைகாட்டும் முன்னரே அவர் அங்கு வந்து நின்று விட்டிருந்தார். அப்பா ” என்ன” என்று கேட்டார். அந்த இளைஞன் “சைலன்சர் கட்டாகிடுச்சு, வாங்க ” என்றான். அப்பாவும் அவனும் முன்னே நடந்தார்கள், அவர்களோடு ராஜு ஓடிப்போய் சேர்ந்து கொண்டான்.
10 வண்டிகள் காட்டிய லாரி நின்றிருந்தது, அவன் கிளீனர், அங்கே டிரைவர் காக்கி சட்டை போட்டு லுங்கி கட்டி கொண்டு நின்றிருந்தார். அப்பாவை பார்த்ததும் “குட்டப்ப அண்ணா, சைலன்சர் கட்டாகிடுச்சு, வண்டி புக்கிங் ஆகிடுச்சு, சீக்கிரம் கிளம்பனும், கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணி கொடுங்க” என்றான். அப்பா பெயரை டிரைவர் சொன்னபோது ராஜு ஆச்சிரியப்படவில்லை, ஒருமுறை கேரளாவில் ஒரு கல்யாணத்திற்காக அம்மா, அப்பா, அவன், அக்கா எல்லாம் சாலையில் சென்றிருந்தபோது, அந்த சாலையில் சென்று கொண்டிருந்த லாரி இவர்களை தாண்டியதும் நின்று, அப்பாவை பெயர் சொல்லி டிரைவர் அழைத்து பேசி மகிழ்ந்தான், கோவை வழியாக செல்லும் எந்த லாரியும் உக்கடம் லாரி பேட்டை வரும் நீண்ட நாள் டிரைவராக இருந்தால் அப்பாவை அந்த டிரைவருக்கு தெரிய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் உணர்ந்த ராஜுக்கு அப்பாவை தெரிந்த நபர்கள் லாரி பேட்டையில் பார்க்கும் சூழல் என்பது சாதாரண விஷயமாகதான் இருந்தது.
அப்பா குனிந்து லாரிக்கு அடியில் போய் பார்த்தார், சைலன்சரின் உடைந்த பகுதியை தட்டி பார்த்தார், பிறகு வெளியே வந்தார், ” பெருசா கட் ஆகி இருக்கு, பீஸ் வைக்கணும் 400 ரூபா ஆகும்” என்றார். டிரைவர் ”இது ஜாஸ்தி 200 ரூபாவே அதிகம்” என்றான், அப்பா “இப்ப கேஸ், கார்பைடு என்ன விலை விக்குது னு தெரியுமா, நல்லா பண்ணித்தரேன், 400 கொடுத்துடுங்க” என்றார். டிரைவர் “குட்டபண்ணா, 300 ரூபா தரேன், சீக்கிரம் முடிச்சு கொடுங்க” என்றான். அப்பா “சரி, முதல் போணி 350 கொடுத்துடுங்க” என்றார். டிரைவர் “சரி சீக்கிரம் பண்ணுங்க” என்றார். அப்பா உற்சாகமாக வெல்டிங் gas உருளை செட்டை எடுத்து கொண்டு வர போனார். ராஜுவுக்கு அப்பா கேட்ட தொகை அதிகம் என்று தோன்றியது, 20 நிமிடத்தில் முடியும் வேலைக்கு இவ்வளவு கேட்பது அதிகம் என்று நினைத்தான்,100-150 ரூபாய் தான் சரியான தொகை என்று எண்ணினான், ஆனால் அதெல்லாம் மறைந்து அப்பாவிற்கு பணம் கிடைக்க போகும் சந்தோசம் அவனுக்குள் தொற்றி கொண்டு அவனும் உற்சாகமானான்.
இருவரும் வெல்டிங் சாதனங்களை நகர்த்தி கொண்டு லாரி பக்கம் வந்தார்கள், அப்பா வெல்டிங் சிலிண்டர், கார்பைடு போடும் டேங்க் எல்லாம் சேர்த்து ஒரு பலகை தொட்டியில் வைத்து அதன் கீழ் நான்கு இரும்பு உருளையும் மாட்டி இருந்தார், எங்கு வேண்டுமானாலும் தள்ளி கொண்டு போக முடியும்.
வண்டி பக்கம் வந்தவுடன் வேகமாக நாசிலை பிரித்து சைலன்சரின் உடைந்த பகுதி பக்கம் கொண்டு சென்றார், அந்த நாசில் சிலிண்டர் உருளை மற்றும் கார்பைடு டேங்க் உடன் ரப்பர் குழாய் வழியாக இணைக்கப்பட்டிருந்தது, நாசில் தேவைக்கேற்ப டூல்ஸ் வெளியிடும் கருவி அப்படி வெளிவரும் gas உயர் அழுத்த தீயாக ஆகி வெல்டிங் அடிக்க வெல்டிங் கம்பியை உருக்கி கொடுக்கும், கூடவே வெல்டிங் பகுதியை வெப்பமாக்கும், அப்படி வெப்பமாக்கப்பட்ட பகுதியில் உருகிய கம்பி இரும்பு படர்ந்து உடைந்த அல்லது இணைக்க வேண்டிய பகுதியை இணைக்கும். வரிசையாக போட்டு வைத்து வருவது போல இப்படி இணைத்து கொண்டு இணைக்க வேண்டிய பகுதியை இணைப்பார்கள், வெல்டிங் முடிந்த பிறகு அந்த அந்த இடத்தில் இரயில் பூச்சி ஒட்டிக்கொண்டிருப்பதை போல இணைப்பு பகுதியில் வெல்டிங் இருக்கும்.
அப்படி இணைக்க லாரிக்கு அடியில் போனார், நாசிலை தீப்பெட்டி திறந்து பற்ற வைத்தார், அதற்கு முன்பே, லாரிக்கு அடியில் போகும் முன்பே gas சிலிண்டரை திறந்து தேவையாக gas நாசிலுக்கு வர திறந்து வைத்திருந்தார். சரியாக நாசில் பற்றிக் கொள்ளவில்லை போல, வெளியே வந்தார், கார்பைடு டேங்க்கை ஆட்டிப் பார்த்தார், பிறகு தன்னையே நொந்து கொண்டவர் போல முகம் வைத்து கொண்டு, “கார்பைடு முடிந்துச்சு” என்றார், பிறகு ட்ரைவரை நோக்கி “கார்பைடு கல்லு மட்டும் வாங்கிட்டு வந்துடறேன், ஒரு 200 கொடுங்க” என்றார். ட்ரைவரின் முகத்தில் கோபம் தெரிந்தது “கார்பைடு கூட வாங்கி வைக்காம என்னத்த தொழில் பண்றீங்க” என்று கடிந்தான், பிறகு புலம்பியவாறே பாக்கெட்டில் கையை விட்டு 100 ரூபாய் நோட்டு இரண்டு எடுத்து கொடுத்தார், அப்பா ஆர்வமாக வாங்கி ராஜுவை நோக்கி “இங்கயே இருடா, இப்ப வந்துடறேன் ” என்றார்.
ராஜுவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது, கார்பைடு டூல்ஸ் பெட்டிக்குள் அப்பா எப்போதுமே குறைந்தது 2 கிலோ வைத்திருப்பார், இன்றும் பெட்டிக்குள் இருந்ததை அவன் பார்த்தான், அப்பா ஏன் இப்படி பொய் சொல்கிறார் என்று உள்ளுக்குள் பொருமினான், ஏன் இவ்வளவு பணத்திற்கு பறக்கிறார் என்று கோபம் கொண்டான். இந்த அங்கலாய்ப்பு அப்பாவுக்குள் எப்போது வடிந்து தொலையுமோ என்று நொந்து கொண்டான், அப்பாவை மிக மோசமான நபராக எண்ணினான். அப்பா 10 நிமிடத்தில் கார்பைடு பொட்டணமோடு வந்தார், அவசர அவசரமாக கார்பைடு மாற்றினார், பிறகு வண்டிக்கு அடியில் போனார், நாசில் அழுத்த நீலநிற தீயை வேகமாக தந்து கொண்டிருந்தது, அப்பா வெல்டிங் செய்யும்போது அவர் மனம் முழுதும் அதிலேயே இருக்கும், அவருக்கு வெல்டிங் வைப்பது ஒருவகை தியானம் போல, முடித்து கொண்டு வெளியே வந்தார், நாசில் இருந்த ரப்பர் குழாயை சுற்றி கார்பைடு டேங்க் மீது வைத்தார், பிறகு டிரைவரை பார்த்தார், “முடிஞ்சது” என்றார். டிரைவர் “குட்டப்பண்ணா, பில்லு கொடுங்க, டிரைவர் நம்ப மாட்டாரு இவ்வளவு பணம் ஆச்சுன்னு” என்றான், அப்பா கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லி வெல்டிங் செட்டை நகர்த்தி workshop கொண்டு போனார், ராஜுவும் சேர்ந்து தள்ளினான், அப்பா டூல்ஸ் பெட்டிக்கு அருகில் இருந்த பில் புக்கை எடுத்து பில் எழுதினார்,அந்த பில்லில் மேலே கே பி குட்டப்பன் டிங்கர் ஒர்க்ஸ் என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது, ராஜு அதை காணும் போதெல்லாம் படித்து பார்ப்பான். அப்பா பில் போட மட்டுமே எழுத வாய்ப்பு கொண்டவர் என்பதால் ஆசையாக எழுதி முடித்தார். பின் வண்டி நோக்கி நடந்தார், ராஜுவும் கூடவே போனான்.
அப்பா அதிர்ச்சியில் உறைந்தார், அங்கு வெல்டிங் பணி செய்த லாரியைக் காணவில்லை, அப்பா சுற்றி சுற்றி தேடினார், வண்டியை காண முடியவில்லை. அப்பா “தாயோளிக, தேவிடியா மவ,” என்று காணாமல் போன வண்டியின் டிரைவரை திட்டி கொண்டிருந்தார். ராஜுவுக்கு டிரைவர் பணம் தராமல் ஏமாற்றி போனதை விட எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் வண்டியோடு காணாமல் போனார்கள் என்று ஆச்சிரியம் கொண்டான். பிறகு அவனும் டிரைவரை மனதிற்குள் திட்டினான். பிறகு சற்று நேரம் கழித்து இருவரும் டீ கடை சென்றனர், அப்பா “கார்பைடுக்கு பணம் வாங்காம போயிருந்தா எல்லா காசும் போயிருக்கும்” என்றார்.
– ராதாகிருஷ்ணன்
நன்றி : பதாகை.காம்