மூன்றாம் உலக யுத்தம் வரப்போகிறது ,என்று
யாரும் அச்சப்பட வேண்டாம்.
அந்த யுத்தம்
இரண்டாயிரத்து ஒன்பதில்
கனவு தேசத்தை விழுங்கி
முள்ளிக்கரையில் புதைத்ததோடு முடிந்துவிட்டது.
இனி நான்காவது உலக யுத்தம் நடக்கலாம் —
ஊமையாய் இருக்கும் அறிவாளிகள் கண்டுபிடித்த
புதிய தீவிரங்கள்
உலகத்தை அழிக்கலாம்.
அதோ, சிந்திக் கிடக்கிறதே இரத்தம்
அது எல்லா இடங்களிலும் சிவப்புத்தான்.
வெடித்துச் சிதறும் கந்தகத் துண்டுகள்,
இனத்தைப் பார்த்து அறுப்பதுமில்லை
அதை விஞ்ஞானம் மறுப்பதுமில்லை.
இன்றும் ஆபிரிக்கக் குழந்தை
பசியில் துடிக்கையில்,
உணவோடு கண்டம் தாண்டாத ஏவுகணைகள்,
பசியோடு பால் குடித்த குழந்தைகளின் மார்பில்
இரத்தம் குடிக்கின்றன
இதுதானா அறிவியலா?
எங்கு வழிந்தாலும் என் குருதிதான்,
எங்கு போனாலும் என் உயிர்தான்.
இப்படிக்கு,
போர் தின்ற மண்ணின் பிள்ளை.
வட்டக்கச்சி வினோத்
33