உருக்கிரும்பை மீறி
ஒரு உரம் கொண்டவர்.
கொள்கைப் பிடிப்பில்
உடும்புப் பிடியானவர்.
கடலென்ன தரையென்ன
இவர் கால்கள் தடம் பதிக்க
விடமொன்று வந்திவரை
கண்டம் செய்திடுமோ?
பலவிதம் இவர்
உருமாறி ஒரு கோலம்
வெடி சுமந்து தடையுடைத்த
வரலாறு இனி மனம் பேசும்.
கருவேங்கை என்றாகி
காடு மேடென்றும்
நகரங்கள் ஊடறுத்தும்
பகை வீடெரித்தார்.
வான் பறந்து வந்த
அலுமினியப் பறவை
அதன் வீடுதேடிப் போயும்
எரித்து விட்ட பெருமை.
தடம் மாறிடாத
விடுதலை தாகத்தில்
இலக்கு மாறாத
தமிழ் மானமா வீரர்.
சிரித்த முகத்தோடு
சிந்தித்த மனத்தோடு
தளராத நடையோடு
போர்க்களம் போவார்கள்.
நம்பிய தலைவனின்
நம்பிக்கை நட்சத்திரங்கள்.
ஈழமெங்கும் உலாவி வந்த
உயிராயுதங்கள் இவர்கள்.
மனங்களில் இருத்தி
குணங்களில் புகுத்தி
குலம் வாழும் வரை
கொழுந்திடச் செய்வோம்.
–நதுநசி