நம்பிட முடியாத
நாட்கள் அவை.
நினைத்துக் கூட
நடந்திட முடியாது.
திறந்த வெளியில்
மூடிய பதுங்கு குழி.
தின்று பசியாற அன்று
மூச்சுக்கும் இல்லை.
முதுகு வலித்த போது;
கை எடுத்து சொறிந்திட
முழுவதுமாக இல்லை:
கைவிரல் இடைவெளி.
அழுதிடலாம் அங்கே!
கேட்டிட யாருமில்லை.
அழுதிடாது இருந்தால்,
கேட்டிடுவார் ஏனென்று.
முச்சக்கர வண்டிக்கு
மூன்று தேங்காய் கூட:
முழுதாய் பெற முடியாத
மூச்சிரைத்த நேரமவை.
இன்று என்னவோ?
இங்கே இல்லை;
ஒன்றும் என்று சொல்லி
ஒய்யாரமாய் அவர்.
இழந்தவை எல்லாம்
மறந்தவை என்றாக;
பிறந்தவை எல்லாம்
மணந்திட கூடுமோ?
தோள் சுமந்த தந்தை;
நினைத்திட நெஞ்சம்
தோற்கிறது நினைவு.
நிலையில்லா வாழ்விது.
தொழில் செய்திட
தோள் தந்திடும் திறன்
தோழனென்று தொழில்
தேர்ந்திடும் தந்தையே!
கண்ணீர் முட்டி அன்று
மண்ணில் விழுந்தது.
முள்ளிவாய்க்கால் மண்
அணைந்த என் தந்தை.
வார்த்தைகள் கூட
உடைந்து விழுந்து,
விழுதெறிந்த தந்தை
நினைவில் அழுதது.
என்றென்றும் நினைவு
வந்து என்னை தழுவிட,
தாங்கிய சோகம் நூறா
வேகம் தந்திட வேண்டும்.
நதுநசி