முல்லைத்தீவு மண்ணில்
முகாமிட்டு இருந்த; – பகை
விரட்டிய பெருஞ்சமர் இது.
தொடர் கதையாகிய போர்.
தோற்றோடி காட்டினுள்
மறைந்து விட்டவர். – இனி
மீண்டெழுந்து வருவதென்று;
பேச்சே இருக்காது என்றவர்.
தோல்வியின் படிப்பினை;
வெற்றிப் பாதையினை;
தலைவர்; – ஆக்கி நடத்திய,
ஓயாத அலைகள் ஒன்று.
நெஞ்சத்தில் மறக்காது.
ஆடி பதினேழு முடிந்து
விடிந்த போது முல்லைத்தீவு
புகைக்காடாக் கிடந்தது.
விடுதலை வேள்வியில்;
வீழ்ந்தவர் குருதியில்;
அந்த மண் தோய்ந்து போக;
பகைவிரட்டி; – நிலம் மீண்டது.
உறைத்திட உரைத்தது.
உலகம் வியந்ததை பார்த்தது.
பாவம் இராணுவம் என்று;
பரிதாபம் கொள்ள வைத்தது.
ஈழப்போரின் நெடிய பாதை;
முள்ளும் கல்லும் – பாதம்;
மோதி விழுத்திய போதும்,
எழுந்தது அந்தப் பெயரால்.
போரில் சளைத்தவர்
நாமல்ல என்றோங்கி;
பறையறைந்து பேசியது;
முல்லைத்தள வெற்றி.
வலிந்து திணித்த – அந்த
ஆயுதம் கொடுத்த;
பதிலால் கலங்கினர்.
இனியுமொரு போரா?
பகைவன் தன் சிந்தை
கலங்கிட விட்டோடிட; – அவன்
இழைத்த கொடுமைகள்
கொஞ்சமா?… -சொல்வோம்.
ஊற்றங்கரை சித்தி;
பேரருள் விநாயகர்
தேரை எரித்து இருந்தார்.
பல நாள் இடர் தந்து.
வற்றாப்பளை அம்மன்
பொங்கலில் கொன்றார்;
இருபத்தொரு பக்தர்
மூச்சிழந்து சாய்ந்தார்.
விரட்டியாச்சு புலியை – அது
காடு கண்டது. – இனி
அங்கேயும் தொடரும்
எங்கள் வேட்டை என்றவர்.
யாழை விட்டு வந்து
வன்னிக் காடு புகுந்து
பெரு மூச்சு வாங்கிய புலி
முட்டிய பகை எரித்ததுவே!
நதுநசி