செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஏழாந் திங்கள்! | கமல் ஆபரன்

ஏழாந் திங்கள்! | கமல் ஆபரன்

1 minutes read

காற்றில் தோற்காமல்
உதிர்ந்த மலர்களைப் பொத்திவைப்பதாய் இருக்கிறது வாழ்வு!

விழுங்கிக் கொண்டே போகிறது நாள்களையும்..
நில்லாது நிகழ்கிற காலம்,
மறித்துக்கிடந்தாலும் எட்டி விழுகின்றன உன்னோடிருந்த நாள்கள்!

நினைக்கவே துணுக்குறுகிறது
அனைவரும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் நீயில்லாத வழமைக்கு..
இடம் பிடிக்கிறது
வெற்றிடமும்!

விழுங்க முடியா அபத்தங்களால்
நிறைகிற யதார்த்தங்கள்,
கரையாத தெளிவாய் நினைதல்கள்,

தட்டாமாலை சுற்றி விழுந்தாற் போல
பொழுதுகள்,
புழுதி தட்டி எழுவதற்குள்
போய்விட்டிருக்கிறாய் நீ!

எதுவும் இல்லை ~
நம்பிக்கை தருகின்ற கோடுகளுக்குள்
பழசாகிப்போன சொற்கள் தவிர,

எப்போதோ
முழுவதுமாய் மூடிவிட்டது
ஆற்றாமையில் எழுந்த வெறுப்பின் விடம்

புதிதாய்க் கிடைத்தபடியிருக்கின்றன
உன்னோடிருந்த பொழுதுகளும்
புன்னகைகளும்.

விட்டுவந்த தொலைவிலேனும்
உன்னிருப்பை
நம்பிவிட முனைகிறது;
மேலும் செத்துவிட விரும்பாத மனது

எங்கே சுற்றினாலும் எப்போதும்
நுழைந்து விடுகிறது
நீயிருந்த தெருவுக்குள்,
பதிந்து கிடக்கிறதுன் புன்னகை
பழைய குவளைகளில்,
உன்னவில்லை
நீ வந்து போன தெருவில்
உன் துணையின்றித் திரிவதற்கு.
ஒரு குறையும் இல்லை
காதுக்குள் ஒலிக்கிற குரலுக்கும்
கண்ணுக்குள் விரிகின்ற சிரிப்புக்கும்,
நினைவுகளின் தயவில்
நீடிக்கிற ஜீவன்,
களைத்துப்போய்க்கிடக்கிறது
பழி கொள்ளத் தெரியாத வாழ்வு.
பதிலில்லா வெளியில்
மோதி விழுகின்ற கேள்விகள்.

குவிந்துவிட்டன
கதைத்துத் தீர்த்திருக்க வேண்டியவைகள்,
அனிச்சையாய் அழைக்க விளைகின்ற உன்னிலக்கம்,

அந்தரிக்கின்றன ஞாபகக்குருவிகள்
அடைவதற்கில்லாது போன நிலம்

மூடிக்கிடக்கிறது
பொய்களுக்குச் சமாந்தரமாய்ப் போடப்பட்டிருந்த பாதை கூட..

இருப்பதையும்
இல்லாதிருக்கிற இருப்பையும்
ஒரே தட்டில் போடுகிறது காலம்!

திருவிழா முடிந்துபோன தெருவில்
காய்கிற மௌனம்.
அந்த மழைக்குப் பிறகு
எப்போதும் தெளியாத வானம்..

இனி எப்போது அழைத்தால் ஒலிக்கும் ~
உனது குரல்?
எங்கே சந்திக்க அடுத்த முறை?

கமல் ஆபரன்

28.11.2025 ~ 28.06.2026

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.