Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஆசீவகம் | ஆய்வும் நெறிகளும் | சசி ரங்கநாதன்

ஆசீவகம் | ஆய்வும் நெறிகளும் | சசி ரங்கநாதன்

6 minutes read

ஆசீவகம், ஏ.எல்.பாஷாம்

பத்ரி சேஷாத்ரி நேற்று எழுதிய பேராசிரியர் க.நெஞ்செழியனின் ஆசீவகம் குறித்த பதிவினைப் பார்த்தேன். ஆசீவகம் குறித்து ஏ.எல்.பாஷாம் எழுதிய நூலான “History and Doctrines of the Ajivikas: A Vanished Indian Religion” என்ற நூலினை வாசித்து இருக்கிறேன். அந்த வாசிப்பின் அடிப்படையில் பத்ரி ஆசீவகம், தமிழ் சார்ந்து தவறான தகவல்களைக் குறிப்பிடுகிறார் என்பதை என்னால் கூற முடியும்.

பத்ரி குறிப்பிடுகிறார் – “அத்துடன், மூன்று தமிழ் நூல்களில் ஆஜீவகக் கொள்கை பற்றி வரும் கருத்துகளை ஒரு சிறு அத்தியாயத்தில் கடைசியாக இணைக்கிறார். இவை முறையே, மணிமேகலை (பௌத்தம்), நீலகேசி (ஜைனம்) மற்றும் சிவஞான சித்தியார் (சைவம்).”

அதாவது ஒரு “சிறு” அத்தியாயத்தில், “கடைசியாக” ஏதோ தமிழ் இலக்கியத்தில் இருந்து சிலவற்றை எடுத்து போட்டிருக்கிறார்கள் என பத்ரி எழுதிய இந்த வரிகள் கட்டமைக்கின்றன. வாசிக்கிறவர்கள் மனதில் பதிக்க முயற்சி செய்வதும் இந்த அரசியலைத் தான். ஆசீவகத்திற்கும், தமிழுக்கும் பெரிய தொடர்பு இல்லை என்று நிறுவ முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் ஏ.எல்.பாஷாம் தமிழில் இருந்து நிறைய தரவுகளை தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆசீவகம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற இடங்களில் தான் செழிப்பாக இருந்ததாக ஏ.எல்.பாஷாம் குறிப்பிடுகிறார்.

இந்தப் புத்தகத்தை வாசித்து சில வருடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும், நான் முக்கியமாகக் கருதும் சிலவற்றை அடிக்கோட்டிட்டு வைப்பது வழக்கம். அப்படி வைத்த சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

  • முதல் பக்கத்தில், இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள கல்கத்தா பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் திரு.சத்ய ரஞ்சன் பேனர்ஜி, ஆசீவகம் அசோகர் காலத்திற்க்குப் பிறகு வட இந்தியாவில் முற்றிலும் அழிந்து போனதையும், தென்னிந்தியாவில் 14 ஆம் நூற்றாண்டு வரை ஆசீவகம் இருந்துள்ளதையும் குறிப்பிடுகிறார்.

  • மற்றொரு முன்னுரை எழுதியுள்ள லண்டன் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியர் எல்.டி. பார்னெட், ஆசீவகம் குறித்துப் பல நூறு ஆண்டுகள் எந்தப் பெரிய தரவுகளும் இல்லாத சூழலில், தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற பகுதிகளில் இருந்தே கல்வெட்டுகள், இலக்கியங்கள் மூலம் தரவுகள் கிடைத்துள்ளதை குறிப்பிடுகிறார். “Abundant documents in inscriptions of the Tamil and Kanarese areas” என்று பேராசிரியர் எல்.டி. பார்னெட் குறிப்பிடுகிறார்.
  • ஏ.எல்.பாஷாம் தன்னுடைய முன்னுரையில் ஆசீவகம் சார்ந்த இடங்களாக தமிழ்நாடு, கர்நாடகம் சார்ந்த இடங்களின் வரைபடங்களை வெளியிட்டுள்ளார். கூடவே மிகவும் கடினமான தமிழ் இலக்கியங்களைக் கற்க உதவியவர்களையும் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
  • சமனபலசுத்தா என்ற நூலை தொடக்கப்புள்ளியாகக் கொண்டு செய்யப்படும் இந்த ஆய்வில், ஆசீவகம் முன்வைத்த ஊழ்வினைக் கோட்பாடு, நிர்ணயவாதம் (determinism) கொண்டே இந்த ஆய்வினை ஏ.எல்.பாஷாம் நகர்த்துகிறார். சமனபலசுத்தா நூலில் இந்தக் கோட்பாட்டினை முன்வைத்த காரணத்தாலே மற்கலி கோசாலர் ஆசீவகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு ஏ.எல்.பாஷாம் வந்தடைகிறார். கூடவே “திராவிட ஆசீவகம்” என்பதாக தமிழ் நூலில் உள்ள கருத்துகளுடன் இது ஒத்துப்போவதாக, பக்கம் 17ல் ஏ.எல்.பாஷாம் குறிப்பிடுகிறார்.
  • பக்கம் 34ல், கோசாலர் சார்ந்து பொளத்த, சமண நூல்களில் உள்ள பெயர்களைக் குறிப்பிடும் ஏ.எல்.பாஷாம், தமிழில் மற்கலி கோசாலர் என்று கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். கூடவே “இந்து சமஸ்கிருத இலக்கியங்களில்” மற்கலி கோசாலர் குறித்து எதுவுமே இல்லை என்பதையும் பதிவு செய்கிறார். பகவதி சூத்திரம் என்ற சமண நூலில் உள்ள மற்கலி கோசாலர் சார்ந்த தகவல்களைக் கொண்டு தான் அவருடைய வாழ்க்கையை உருவாக்குகிறார் ஏ.எல்.பாஷாம்.
  • பக்கம் 79ல், In the Tamil we find Markali referred to as Aptan, a rather unusual title which may have had a specifically Ajivika connotation என்று குறிப்பிடுகிறார். இந்த ஒரு வரியே ஒரு பெரிய ஆய்விற்கு உட்பட்டது தான். 

  • பக்கம் 80, 81ல் நீலகேசியில் இருந்தும், பக்கம் 81ல் மணிமேகலையில் இருந்தும் பூரணர் குறித்த தகவல்களுக்கு மேற்கோள் காட்டப்படுகிறது.
  • பக்கம் 82ல், திராவிட ஆசீவகர்கள், மற்கலி கோசாலரை கடவுளாகவும், பூரணரை அவரது வழிவந்த தூதுவராகவும் கருதுவதாகக் குறிப்பிடுகிறார். நூலின் பல இடங்களில் “திராவிட ஆசீவகர்கள்” (Dravidian Ajivikas) என்ற சொல்லை ஏ.எல்.பாஷாம் பயன்படுத்துகிறார்.

  • பக்கம் 88ல் பூரணரின் இறப்பு குறித்து பேசும் பொழுது தாழியில் புகுந்து தவம் மேற்கொண்டு உயிர் துறக்கும் விந்தையான வழக்கம் திராவிட ஆசீவக துறவிகளின் வழக்கம் என குறிப்பிடப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பக்கம் 111ல் தொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையை, தொல்லியல் ஆய்வாளர் கே.ஆர்.சீனிவாசனின் மேற்கோளுடன் ஏ.எல்.பாஷாம் குறிப்பிடுகிறார். இந்த விந்தையான முறையை ஆசீவகர்கள் பின்பற்றுவார்கள் என சமண நூல்களும் குறிப்பிடுவதால், தொல்காப்பியம் பாடல்களில் வருவது ஆசீவகம் தான் என்ற முடிவுக்கு வரலாம் என ஏ.எல்.பாஷாம் கூறுகிறார். இது தொல்காப்பியம் பொருள் அதிகாரத்தில் உள்ள ஒரு பாடல்.
  • அது போல திருக்குறளில் உள்ள “ஊழ்” அதிகாரம் ஆசீவகம் சார்ந்ததாக இருக்கலாம் எனவும் ஏ.எல்.பாஷாம் குறிப்பிடுகிறார்.

இவை மட்டும் அல்ல. இன்னும் பல இடங்களில் தமிழில் உள்ள தரவுகளை, ஏ.எல்.பாஷாம் சுட்டிக்காட்டுகிறார். சமனபலசுத்தா, பகவதி சூத்திரம் போன்ற நூல்களைக் கொண்டு தான் இந்த ஆய்வினை அவர் பெரும்பாலும் மேற்கொள்கிறார். என்றாலும் தமிழில் உள்ள ஆதாரங்களையும் அவர் தன்னுடைய ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்.


பத்ரி, ஒரு “சிறு” அத்தியாயத்தில் தமிழ் இலக்கியம் சார்ந்த தகவல்கள் வருவதாகக் குறிப்பிடுகிறார். அந்த அத்தியாயத்தின் தொடக்க வரிகளே இவ்வாறு தான் ஆரம்பிக்கின்றன.

The Ajivikas maintained themselves in the Dravidian-speaking parts of India in a more flourishing condition than in the North, and survived in the Tamil country until at least the fourteenth century. This fact may be established on very solid evidence: firstly by a number of inscriptions mentioning the Ajivikas, and covering a period of nearly a millennium; secondly by the three religious texts Manimegalai, Nilakeci, and Civananacittiyar….; and thirdly by a number of shorter references in other Tamil and Canarese works.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள சுமார் 17 கல்வெட்டுகளை இந்தக் கடைசி அத்தியாயத்தில் பட்டியலிடுகிறார். இந்த அத்தியாயத்தில், அவர் பல தகவல்களைக் கூறிச் செல்கிறார். இந்தத் தகவல்கள் ஒவ்வொன்றுமே பெரிய ஆய்விற்கு உட்பட்டவை தான்.

இந்தப் புத்தகம் ஒர் ஆரம்பகட்ட ஆய்வு மட்டுமே. சமனபலசுத்தா, பகவதி சூத்திரம் போன்ற பொளத்த, சமண நூல்களில் உள்ள தகவல்களை மூலமாகக் கொண்டு, தமிழில் உள்ள தகவல்களையும் இணைத்து தான் இந்த ஆய்வினை ஏ.எல்.பாஷாம் செய்திருக்கிறார். ஏ.எல்.பாஷாமின் இந்தப் புத்தகம் 1951ல் முதன் முதலில் வெளியானது. அதனுடைய மறுபதிப்பில், 1980ல் முன்னுரை எழுதுகிற ஏ.எல்.பாஷாம் ஆசீவகம் சார்ந்து நிறைய புதிய ஆய்வுகளும், புத்தகங்களும், புதிய தரவுகளும் வெளியாகியுள்ளதைக் குறிப்பிடுகிறார். தன்னுடைய புத்தகத்திற்கு வந்த விமர்சனங்களையும் குறிப்பிடுகிறார்.

ஆசீவகம் சார்ந்து தொடர் ஆய்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஏ.எல்.பாஷாம் செய்தது ஒர் ஆரம்பம் மட்டுமே.

தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற பகுதியில் ஆசீவகம் செழித்திருந்ததை ஏ.எல்.பாஷாம் பதிவு செய்துள்ளதை கவனிக்கும் பொழுது தமிழ்நாட்டில் தான் ஆசீவகம் குறித்து தீவிர ஆய்வுகள் செய்ய வேண்டும். ஆசீவகம் செழித்திருந்த தமிழ்நாட்டில் அதனை ஆய்வு செய்யாமல் எங்கு சென்று ஆய்வு செய்வது ? இப்படி ஆய்வு செய்தால் அதனைக் குடிசைத் தொழில் என்கிறார்கள்.


ஏ.எல்.பாஷாம் தன்னுடைய முன்னுரையில், இந்தப் புத்தகம் சார்ந்த விமர்சனங்களைப் பற்றிப் பேசும் பொழுது “History is not an exact science, any such attempt must inevitably be to some extent speculative” என்கிறார். ஏ.எல்.பாஷாம் மட்டும் அல்ல, அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் வில் டூரண்ட் தன்னுடைய “The Lessons of History” என்ற புத்தகத்தில் “Most History is guessing, and the rest is prejudice” எனக் குறிப்பிடுகிறார். அதாவது இது வரை எழுதப்பட்ட வரலாறு என்பது பெரும்பாலும் அனுமானம், எஞ்சியவை சார்புத்தன்மை கொண்டவை என்கிறார்.

வரலாற்று ஆய்வு என்பது சில தரவுகளைவும் அவற்றைச் சார்ந்த சில அனுமானங்களையும் கொண்டதாகவே எப்பொழுதுமே உள்ளது. உதாரணமாக இந்திய வரலாறு எழுதுபவர்கள் எல்லோருமே, “எல்லாமே” வடக்கில் இருந்து தான் தெற்கு நோக்கி வந்தது என்பதை அனுமானமாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு எதிரான ஆய்வுகள் வரும் பொழுது அதனை குடிசைத் தொழிலாக கட்டமைக்க முனைகிறார்கள்.

AJIVIKA

ஆசீவகம்

சசிக்குமார் ரங்கநாதன்


I have scanned few pages from the book for reference. 2009 reprint edition

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More