Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் வைகாசி விசாகம் பற்றிய சிறப்புக்கள்

வைகாசி விசாகம் பற்றிய சிறப்புக்கள்

3 minutes read

முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது வைகாசி.

1.வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.

2. வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய ஸ்தலமாக காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.

3. வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.

4. வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

5. காஞ்சி மகா பெரியவர் அவதரித்ததும் வைகாசி மாதமே!

6. சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலா மணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும், லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

7. தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.

8. இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது வைகாசி.

9. இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராமராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

10. மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பெயர் பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்கு வதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன் என்று கூறி மறைந்தது, இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.

11. ராஜஸ்தான் மாநிலத்தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைஷாக பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும் யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.

12. தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன. அவ்வகையில, வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

13. பெருமானுக்குரியதாக வைகாசி விசாகம் மிளிர்கின்றது. சிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும், முருகப்பெருமான் விசாகமாக (கீழ் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கி கூறுகிறது.

14. பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

15. விசாகம் குரு விற்குரிய நட்சத்திர மாவதால் குருவிற்கு உரிய தலமான திருச் செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

16. தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

17. திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும்.

18. பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

19. ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

20. கன்னியா குமாரியம் மனுக்கு ஆராட்டு விழா இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

21. திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

22. ராம-ராவண யுத்தத்தின்போது விசாகம் அமைந்துள்ள கோள் நிலையையும், அது காட்டிய நன்மை, தீமைளையும் மனதில் கொண்டே ராமன் போரிட்டு ராவணனை வதம் செய்து வெற்றி கொண்டார் என்பர்.

23. ராஜராஜ சோழ மாமன்னரின் சரிதத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத்திருநாளில் நடத்திய நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் வழங்கிய ஆணை, தஞ்சை பெரிய கோவில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளது.

24. திருச்சி அருகில் ஐயர் மலை என்று வழங்கப்படும் வாட்போக்கி ரத்னாசலேஸ்வரர் (ரத்னகிரி) கோவில் கல்வெட்டில் வைகாசித் திருவிழா சிறப்பாக நடத்திட கோனேரின்மை கொண்டான் என்ற அரசன் நிலம் வழங்கியதை குறிப்பிடுகிறது.

25. இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More