ஜோதிட ரீதியாக தெய்வங்களைத் திடமான நம்பிக்கையோடு வணங்குவதால் நிச்சயம் நற்பலன் கிடைக்கும் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் வேண்டாம்.
1. குலதெய்வ வழிபாடு
2. ஜாதகத்தில் அதிக பாகை பெற்ற கிரக தெய்வ வழிபாடு (ஆத்ம கிரக தெய்வ வழிபாடு)
3. ஆகமி கிரக தெய்வ வழிபாடு (முன்னோர்கள் வழிபாடு செய்து பின்னர் காலப்போக்கில் வழிபாடு செய்யத் தவறிய தெய்வ வழிபாடு)
4. கரண தெய்வ வழிபாடு
5. இஷ்ட தெய்வ வழிபாடு
6. உபசனா தெய்வ வழிபாடு
கண்ணுக்குத் தெரியும் நேரில் காணும் பிரத்யட்ச தெய்வங்களான பெற்றோரே முதல் தெய்வமாகும். தாய், தந்தை இவர்கள் தான் நாம் வணங்க வேண்டியவர்கள். அவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களையும் சந்தோஷமாக வாழ வைப்பதன் மூலம் நாமும் நமது சந்ததியும் நலமோடு வாழ வழிவகுக்கும்.
குலதெய்வ வழிபாடு
சிலருக்கு குலதெய்வ வழிபாடு பலன் அளிப்பதாய் இருக்காது. காரணம் வழிபாடு செய்யும் குலதெய்வம் சரியானதாக இல்லாமல் இருப்பதும், வணங்கி வழிபடுவது வேறு தெய்வ வழிபாட்டு முறையுமாக இருப்பதாகும். ஒருவரின் ஜாதகம், குலதெய்வம் கண்டுபிடிப்பதற்கு எளிமையான வழிமுறைகளைச் சொல்லி இருப்பது அதிசயம் தான். முன்னோர்கள் செய்யும் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டுச் செய்யும் போதும் குலதெய்வம் பலன் அளிப்பதில் தாமதமோ அல்லது முற்றிலும் பலன் கிடைக்கப்பெறாமல் இருக்கக் காரணங்கள் ஆகிறது. குலதெய்வ வழிபாடு செய்யாமல் வேறு எந்த தெய்வத்தின் மூலமும் முழு பலனை அடைந்துவிட முடியாது.
ஆத்ம கிரக தெய்வம்
இரண்டாவதாக ஆத்ம கிரகம். பிறப்பு குறிப்பு சரியாக இருந்து அதன் மூலம் அறியப்படும் அதிக பாகை பெற்ற ஒரு கிரகம் சுட்டி காண்பிக்கும் தெய்வத்தை அறிவதே ஆத்ம கிரகமாகும். சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களும் பெற்றிருக்கும் அதிகபட்ச பாகையைக் கண்டு சரியான ஆத்ம கிரகம் – காரக தெய்வத்தை அடையாளம் காண முடியும். ராகு – கேதுக்களுக்கு தனியான சொந்த வீடு இல்லாததால், அவைகள் நிற்கும் ராசி நாதர் (கிரகம்) பெற்ற பாகையை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த வழிபாடு, ஒரு ஜாதகரை தனது ஆத்மா கூறும் செயலையே செய்ய வைக்கும். அறிவு கூறியபடி செய்ய வைக்காது. ஆத்மா கூறியபடி செய்வதால் ஜாதகர் எடுக்கும் முடிவுகளில் நியாயம் இருக்கவே செய்யும். அறிவு கூறியபடி செய்வதில் நியாயம் இருக்காது. இங்கு அதிக பாகை பெற்ற கிரகம் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பின் அதில் எந்த கிரகம் அதிக பாகை பெற்றுள்ளதோ அது சுட்டிக்காட்டும் தெய்வ வழிபாடு சிறந்தது.
ஆகமி கிரக தெய்வ வழிபாடு
மூன்றாவது, ஆகமி கிரக தெய்வத்தை வழிபாடு செய்வது. ஒரு ஜாதகத்தில் 12 ராசிகளில் நிற்கும் ஒவ்வொரு கிரகமும் ஒரு கிரகத்தின் சாரத்தில் நிற்கும். சிலரின் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு நட்சத்திர சாரம் அல்லது இரு நட்சத்திர சாரம் பெறாமல் விடுபட்டிருக்கும். இந்த கிரகம் / கிரகங்களே ஆகமி கிரகம் எனப்படும். இது அந்த ஜாதகரின் முன்னோர்களே வணங்காமல் விடுபட்ட கிரகத்தின் / தெய்வத்தின் சாயலே இங்கு தெளிவாக உணர்த்தும். இந்த கிரகத்தின் தெய்வத்தை வணங்குவதால், நலம் பெறலாம். ஒரு கிரகத்திற்கு மேல் இருப்பின் அவற்றுள் அதிக பாகை பெற்ற கிரகத்தின் தெய்வத்தை வணங்குவது சரியானதாக இருக்கும்.
கரண தெய்வ வழிபாடு
நான்காவதாக, ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஒரு கரணம் தெரியப்படுத்தும். அந்த கரண நாதரை வணங்குவதாலும், திருமண பொருத்தத்தில் கரண பொருத்தம் அறிந்து சேர்த்து வைப்பதாலும் ஒருவரின் வாழ்வு சீராகக் கொண்டு செல்லும். விடியற்காலையில் கண் விழித்ததும் இந்த கரண விலங்கை / பறவையைத் தரிசிப்பதால் ஒருவரின் வாழ்வு முன்னேற்றம் அடைவதைக் கண்கூடாகக் காணலாம்.
இஷ்டதெய்வ வழிபாடு
ஐந்தாவதாக, இஷ்டதெய்வ வழிபாடு. ஒவ்வொருவருக்கும் தம் மனதில் ஏதேனும் ஒரு தெய்வம் மிக விருப்பமானதாகத் தோன்றும் அதனை இஷ்டப்பட்டு விரும்பி வணங்குவதால், மன நிறைவும், நற்பலனும் கிடைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
உதாரணத்திற்கு
பவ கரணம் – சிங்கம் – நாமக்கல் / அகோபில நரசிம்மர்
பாலவ காரணம் – புலி – சபரிமலை ஐய்யப்பன்
கௌலவம் காரணம் – பன்றி – ஸ்ரீ முஷ்ணம் வராக பெருமாள்
வனிசை காரணம் – எருது / காளை – திருமணப்படி, அரியலூர் சிவன்
பத்திரை – சேவல் – திருச்செந்தூர் முருகன்
உபாசனை தெய்வ வழிபாடு
ஆறாவதாக உபாசனா தெய்வ வழிபாடு. இதை ஒருவர் சூரியன் அஷ்டவர்க்கத்தில் எந்தெந்த ராசிகளில் சூரியன் அதிக பரல் (5 / 6 / 7 / 8 பரல்கள்) அளித்திருக்கிறதோ, அந்தந்த ராசிகளுக்கேற்ற தமிழ் மாதங்களில் உபாசனை தெய்வத்தை வணங்குவதால் நற்பலனை அடைவர். உபாசனை தெய்வம் என்பது என்னவென்றால், லக்கினத்திற்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் கிரகம் / கிரகங்களை அது பாதக ஸ்தானம் என்றாலும் (ஸ்திர லக்கினத்திற்கு – ரிஷபம் / சிம்மம் / விருச்சிகம் / கும்பம் ) அதிக பாகை பெற்ற அங்கு நிற்கும் கிரகத்தின் தெய்வத்தை வணங்குவது சிறந்த பலனை அடையச்செய்யும். கிரகம் ஏதும் இல்லாத போது 9ஆம் இடத்து அதிபதி சுட்டிக் காட்டும் கிரக தெய்வத்தை வணங்குதல் நலம் அருளும்.
கிரகங்களுக்கு நிகரான தெய்வங்கள்
சூரியன் : சிவன் வழிபாடு
சந்திரன் : சாந்த நிலையில் உள்ள கையில் ஆயுதங்கள் அற்ற நிலையில் உள்ள அம்மன் வழிபாடு
செவ்வாய் : முருகர் வழிபாடு. அனுமன் வழிபாடு
புதன் : மகா விஷ்ணுவின் வழிபாடு.
குரு : சாய் பாபா, ராகவேந்திரர் போன்ற மகான்களின் மற்றும் ஜீவசமாதி வழிபாடு.
சுக்கிரன் : மிகுந்த ஆடை ஆபரணங்கள் சூடிய அலங்கார நிலையில் உள்ள தாயார் / மகாலக்ஷ்மி வழிபாடு.
சனி : சாஸ்தா, சபரிமலை அய்யப்பன், வெங்கடேச பெருமாள் வழிபாடு.
ஞாயிறு : சூரிய வழிபாடு, சிவன் / பெருமாள் வழிபாடு
ராகு : துர்க்கை, மனித முகமற்ற தெய்வ வழிபாடு. சரபேஸ்வரர், பிரத்யங்கரா
கேது : விநாயகர்
இவ்வளவு தெய்வ வழிபாட்டு வழிகளை ஒரு ஜாதகம் அறியப்படுத்தும். இதில் ஜாதகர் ஒரு சிறந்த ஜோதிடரை அணுகி, கேட்டு ஏதேனும் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ அறிந்து வழிபாடு செய்து வாழ்வில் நலமுடன் பல்லாண்டு வாழ வழி வகுத்துக் கொள்ளலாம்.