செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் குழந்தை பாக்கியம் கிட்ட செய்ய வேண்டியவை..

குழந்தை பாக்கியம் கிட்ட செய்ய வேண்டியவை..

3 minutes read

குழந்தை பாக்கியம் என்பது இறைவன் கொடுக்கும் ஒரு வரம். ஒரு பெண் தாயாகும் போதுதான் அவளது வாழ்க்கை முழுமை அடைகிறது. பெண்மைக்கான மதிப்பு கூடுகிறது. அப்பேற்பட்ட மழலை பாக்கியத்தை ஒருசிலர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே பெறுகிறார்கள். ஜோதிட ரீதியாக அதற்கு என்ன காரணம், பரிகாரம் என்ன என்பது இக்கட்டுரையில்,

குழந்தை பாக்கியம் ஒரு தம்பதியருக்கு உண்டா? இல்லையா?

இந்த கேள்வியை திருமணத்திற்கு முன்னரே அறிந்து கொள்வது நல்லது. திருமணத்திற்கு பிறகு இதனை சிந்திப்பதால் நிச்சயம் பலன் கிட்டுவதில்லை மற்றும் நிறைய பிரச்சினைகள் வரலாம். அது எப்படி திருமணத்திற்கு முன்னரே அறிவது. ஆம், ஆண் ஜாதகத்தை பீஜஸ்புடம் எனும் கணிப்பு மூலமாகவும்; பெண் ஜாதகத்தினை ஷேத்திர ஸ்புடம் எனும் கணிப்பு மூலமாகவும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். பூரண ஆண் அல்லது பூரண மகள் என்பதை அறிய முடியும். அப்படி இல்லை எனில் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தான் என்பதையும் அறிந்து ஒரு ஜோதிடர் கூறினால் அதன் படி தம்பதிகள் இருவரும் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ உதவியுடன் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏதும் இருக்காது என திருமண பொருத்தத்தில் கண்டுவிட முடியும்.

பொதுவாகத் தம்பதியரில் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை பாக்கியம் என்பதனை அறிந்து ஜோதிடர் பொருத்தத்தை சேர்த்து வைப்பர். இருவருக்குமே மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் தான் என்பதனை அறிந்த ஒரு ஜோதிடர் நிச்சயம் சேர்க்க மாட்டார். ஆனால், பொருத்தம் பார்க்கும்போது இருவருக்கும் வயது அதிகமாக இருந்தாலோ, இரண்டாவது திருமணம் என்றாலோ மட்டும் தான் இருவருக்கும் மருத்தவ சிகிச்சைக்குப் பின்னர் தான் குழந்தை பாக்கியம் என்பதால் சேர்த்து வைக்க முற்படுவர்.

சதுர் ஸ்புடமும், குழந்தை நிச்சயம் இல்லையென அறிதலும்

மேற்படி பீஜ ஸ்புடம் ஆணுக்கும், ஷேத்ரஸ்புடம் பெண்ணுக்கும் அறிந்த பின்னர், நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிரமம் உள்ளதை அறிந்த பின்னர் சதுர் ஸ்புடம் என்பதனை ஒரு ஜோதிடர் கணக்கு போட்டுப் பார்த்தால், அதில் கிடைக்கும் பதில் நிச்சயம் இந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் உண்டா, இல்லையா என அறிய முடியும். இதனை ஆண், பெண் இருவருக்கும் காணும் ஒரு ஜோதிட கணக்கு தான் சதுர் ஸ்புடம் எனும் ஜோதிட கணிதம். அதன்படியும் இல்லையென அறியும் நிலை வந்தால் அடுத்து ஒன்று தத்து எடுப்பது அல்லது புத்திர காமேஷ்டி யாகம் செய்வது. இந்த இரண்டுமே சற்று சிரமமானதுதான்.

தத்து எடுப்பதில் குடும்ப உறுப்பினர்களின் சம்மதம் மற்றும் சட்ட சிக்கல்களைக் காணுதல் அவசியமாகிறது. அடுத்ததாகப் புத்திர காமேஷ்டி யாகம், அதனை அனைவரும் அவ்வளவு சுலபமாகச் செய்யலாகாது. காரணம், அதிக செலவு செய்து தான் அதனைச் செய்ய வேண்டிவரும். அப்படியே செய்தாலும் அவர்களுக்கு அந்த யோகம் இருக்கிறதா இல்லையா, நடப்புத் தசை தம்பதியர் இருவருக்கும் நன்றாக உள்ளதா என அறிவது அவசியம் ஆகிறது. அப்படியென்றால் வசதி குறைந்தவர்கள் என்ன செய்வது எனத் தெரிந்துகொள்வோம்.

புத்திர காமேஷ்டி யாகம் நடக்கும் இடமும், நேரமும், காலமும்

ஆதிஜெகநாதர் (அமர்ந்த கோலம்), சயன ராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் திருப்புல்லானியில் தரிசிக்கலாம். இந்தக் கோயில் ராமநாதபுரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், ராமேஸ்வரத்தில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

தசரதன் மகபேறு வேண்டி உலகத்தைச் சுற்றிவரும்பொழுது இந்தப் பெருமாளை 60000 மனைவிகள் இருந்தும் குழந்தை பேறு இல்லையே என்று வேண்ட, உடனே ஆதி ஜெகன்னாத பெருமாள் ஒரு மந்திரத்தைச் சொல்ல, பின்பு தசரதன் இத்தலத்தில் நாகப்பிரதிஷ்டை (அதாவது இப்போது அந்த சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சன்னதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின் புத்ரகாமேஷ்டி யாகம் செய்யப் பெற்றதாகக் கூறப்படுகிறது. புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை, தசரதனுக்கு பெருமாள் உபதேசம் செய்தபின், தசரதன் பிரதிஷ்டை செய்த நாக லிங்கம் இன்றும் கோயிலில் உள்ளது.

இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோயிலுக்கு வந்து அங்குத் தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசகம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாக பிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டி யாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருப்புல்லானியில் தற்போது இந்தப் புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதில்லை என தகவல். ஆனால் குழந்தை பாக்கியம் பெறுவதற்கு அங்குத் தினமும் காலை 9 மணி அளவில் நெய்வேத்திய பாயசம் அளிக்கப்படுகிறது. இதனை அருந்தியும் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.

தமிழகத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் உள்ள புதுக்காமூரில் புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் ஆனி மாதம் வரும் பௌர்ணமி நாளில் 11 சிவாச்சாரியார் கொண்டு “புத்திர காமேஷ்டி யாகம்” நடைபெறுகிறது. இதில் புத்திர பாக்கியம் பெற வேண்டுபவர்கள் கலந்துகொண்டு, புத்திர தோஷம் நீங்கி நற் புத்திர பாக்கியம் பெறுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறது. இங்கே கருவறையில் 9 நாகங்கள் குடைப் பிடிக்க அதன் கீழ் தான் லிங்கவடிவில், புத்திரகாமேட்டி ஈஸ்வரர் அமர்ந்துள்ளார். இங்குள்ள இறைவியின் பெயர், பெரியநாயகி. இங்குப் பிரார்த்தனை செய்யும் அன்பர்களுக்குப் புத்திர பாக்கியம் நிச்சயம் பெரிய மனதுடன் அருளுகிறாள் என்பதில் சந்தேகம் வேண்டாம். இந்த யாகம் வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி (ஆனி பௌர்ணமி) நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் விசாரித்துப் பின்னர் யாகத்தில் கலந்து கொள்ளலாம்.

புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்பது, ஒருவர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் எனப்படும் லக்கினத்தை அடுத்து வரும் 5ஆம் இடத்தில், ராகு, கேது, சனி, செவ்வாய், சூரியன் இருந்து தோஷத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளவர்கள் இந்த யாகத்தில் பங்கு பெறுவதோடு அங்குள்ள வேம்புடன் இணைந்து வளர்ந்துள்ள ஆலமரத்தடியில் தமது நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்து வழிபடுவதும் ஒரு நம்பிக்கைக்குரிய செயலாகும். புத்திர காமேஷ்டி யாகத்திற்கு கோயிலில் சிறப்பு கட்டணமும் வசூலிக்கிறார்கள் அதனை நன்கறிந்து தேவைப்படும் அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் புத்திரகாமேஷ்டி யாகத்தை, தசரதர் தமது குல குருவான வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் அவர் குறிப்பிட்ட இடத்தில் செய்து ராமர் அவருடன் பிறந்த மற்ற மூவர் லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர் ஆகியோரை பெற்றார் என்பது ராமாயண காப்பியத்தில் கூறப்பட்ட தகவல். இதனை நம்பிக்கையுடன் செய்வதால் பித்ரு தோஷம் போன்ற பிற அனைத்து தோஷத்தையும் நீங்கிக் குழந்தை பாக்கியம் பெறுவார்கள். பொதுவாக எந்தப் பரிகாரம் ஆகினும் வளர்பிறையில் செய்வது நற்பலனை தரும். எனவே, முழு நம்பிக்கையோடு, மேற்படி யாகத்தில் பங்குபெற்று அனைத்து தோஷமும் நீங்கி, புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More