செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை எப்படி இருக்கிறது தமிழ் அரசியல் சூழல்? | கருணாகரன்

எப்படி இருக்கிறது தமிழ் அரசியல் சூழல்? | கருணாகரன்

4 minutes read

தமிழ்த்தேசியவாத அரசியல் தரப்புகள் தமக்கிடையில் வெறிகொண்டு மோதுமளவுக்கு நிலைமை கீழிறங்கியுள்ளது. அண்மைய உச்சட்ட மோதலாக சுமந்திரன் – கஜேந்திரகுமார் சமர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அடிப்படையில் தமிழரசுக் கட்சி எதிர் தமிழ்த்தேசியப் பேரவை மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான மோதலே இது.

உள்ளுராட்சி சபைகளில் யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, எந்தத் தரப்புப் பலம்பெறுவது என்ற போட்டியே இதனுடைய அடிப்படையாகும். உள்ளுராட்சி சபைகளில் வலுப்பெறும் தரப்பே அடுத்து வருகின்ற மாகாணசபை, பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை நெருங்க முடியும் என்ற கணிப்பின் வெளிப்பாடே இந்தப் பதற்றமும் போட்டியும். இதனால் சமூக வலைத்தளங்களும் போர்க்களமாகி, குருதி சிந்திக் கொண்டிருக்கின்றன. ஏட்டிக்குப் போட்டியாகக் கணைகள் பாய்கின்றன.

ஆனால், இது கொள்கை சார்ந்த மோதலாகவே வெளியே  சித்தரிக்கப்படுகிறது. 13 ஆவது திருத்தத்தை நிராகரிக்கும் தரப்புக்கும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரும் தரப்புக்கும் இடையிலான மோதலாக. அதாவது நடைமுறை சார்ந்த தரப்புக்கும் கற்பனாவாதம் சார்ந்த தரப்புக்குமிடையிலான முரணாகவும் மோதலாகவும் இதைப் பார்க்கலாம்.

இதுவரையில் அரசியல் தீர்வுக்கான முன்நிபந்தனையாக 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிவந்த தரப்புகள், அதைக் கடந்து ஒரு நாடு இரு தேசம் என்ற தம்முடைய நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன என்று கஜேந்திரன்கள் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

ஆக தமக்கு வெளியே உள்ள தமிழ்த்தேசியவாதத் தரப்பில் தமிழரசுக் கட்சி மட்டுமே உள்ளது. அதைத் தனிமைப்படுத்தி விட்டதாக கஜேந்திரகுமார் அணி கருதுகிறது.

இதை மறுக்கும் சுமந்திரன், சிங்கம் எப்போதும் சிங்கிளாகத்தான் நிற்கும். தமிழரசுக் கட்சி தனித்து நின்றாலும் மக்களிடம் அதற்குத்தான் பலமான ஆதரவுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு எதிராகப் பெரிய அணியைத் திரட்டிக் காட்டினாலும் தம்மை எவராலும் அசைக்க முடியாது. தாம் யாரென்று காட்டுவோம் என்கிறார்.

என்னதான் இரண்டு தரப்பும் தமக்கான நியாயங்களை – நியாயப்படுத்தல்களை, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னாலும்  உள்ளுராட்சி மன்றங்களில் கூட பலமாக ஆட்சி அமைக்க முடியாத நிலையிலேயே அனைத்துத் தமிழ்த் தரப்புகளும் உள்ளன. (மாகாணசபைத் தேர்தல் நடந்தால் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும்).

இந்தக் கொடுமையான யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், இவை தமது மோதலுக்குப் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகக் கீழ்மையானவை; வெட்கக் கேடானவை.

யார் சரியானவர்கள்? யார் சுத்தமானவர்கள்? யாருக்கு மக்களிடம் செல்வாக்குண்டு? என்றெல்லாம் போட்டிக்கு அடிபடுகிறார்கள். எதிர்தரப்பைத் தயவு தாட்சண்யமில்லாமல் வசைபாடுகிறார்கள்.
அரசியல் அரங்குகளில் மட்டுமல்ல, தொலைக்காட்சி விவாதங்களிலும் பேட்டிகளிலும் கூட பொறுப்பற்ற விதமாகவே தலைவர்களும் பேசுகிறார்கள்.

இது தமிழ் மக்களுடைய அரசியலை மேலும் பலவீனப்படுத்துவதாகவே வளர்ச்சியடைந்துள்ளது.

தமிழ்த் தரப்பு தனக்குள் பிளவுண்டு மோதிக் கொண்ட போதெல்லாம் சிங்களப் பெருந்தேசியவாதமே நன்மையடைந்தது வரலாறு. பதிலாகத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுப் பின் தள்ளப்பட்டனர். 1960 – 1970 வரையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இப்போதுள்ளதைப்போலவே மோதிக் கொண்டன. அதனால் சிங்களத் தரப்பே நன்மையடைந்தது. 1960 களின் பிற்பகுதியில் தமிழரசுக் கட்சியும் தமிழ்க்காங்கிரசும் பின்னடைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அதனோடிணைந்த இடதுசாரிகளும் முன்னணி வகிக்கத் தொடங்கியதை நினைவு கொள்ள முடியும். யாழ்ப்பாண நகரத்தை சுதந்திரக் கட்சி கைப்பற்றி, துரையப்பா மாநகரசபை முதல்வராக இருந்தார். இதைத் தடுப்பதற்காக அமிர்தலிங்கம் அணி, துரையப்பா தரப்பை துரோகியாக்கியது.

1980 களின் நடுப்பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினாலும் மோதல்களினாலும் கூடச் சிங்களத் தரப்பே வெற்றியைப் பெற்றது. ஒரு கட்டத்தில் இதைப் புரிந்து கொண்ட புலிகள், தமக்குள் நடத்திக் கொண்ட விவாதங்களின் பின், தயக்கத்தோடு ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத்  தம்மோடு இணைத்துக் கொண்டனர்.

போரிலும் அரசியல் அரங்கிலும் அவ்வப்போது விடுதலைப்புலிகள் தற்காலிக வெற்றியைப் பெற்றாலும் இறுதி வெற்றியை அரசாங்கமே பெற்றது.

இந்தக் கசப்பான வரலாற்றுப் படிப்பினையிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாமல் இன்னுமிருக்கும் தமிழ்த்தரப்பு, மேலும் மேலும் கோமாளித்தனமாகத் தனக்குள் முரண்பாட்டு மோதிக் கொண்டேயிருக்கிறது.

எதைச் சிங்கள அதிகார வர்க்கம் விரும்புகிறதோ அதற்குத் தமிழ்த் தரப்புகள் இடமளிக்கின்றன. பலியாகின்றன. இதில் தமிழ்த்தேசியவாதத் தரப்புகள், அல்லாதவை என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. அதாவது தமிழ்த் தரப்பிற்குள் உள்ள இடைவெளிக்குள் சாதுரியமாக நுழைந்து, ஒவ்வொரு தரப்பிலும் காணப்படும் முரண்பாடுகளைக் கையாண்டு, அவற்றைக் கூர்மைப்படுத்தி, ஒவ்வொரு தரப்பையும் துருவப்படுத்தி (பகையாக்கி) விடுகிறது.

இதற்கு அண்மைக்  காலத்தில் நடந்த விடயம் ஒன்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 2015 – 2025  காலப்பகுதியில் (மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில்) முயற்சிக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின்போது சுமந்திரனைத் தன்னுடைய  பக்கத்துக்கு ஈர்த்துக் கொண்ட அரசாங்கம், ‘ஏக்க ராஜ்ஜிய‘ என்ற சர்சைக்குரிய சொல்லை வைத்தே காலத்தை இழுத்தடித்து விளையாடியது.

மட்டுமல்ல, சுமந்திரனை தமிழ் அரசியற்பரப்பில் துரோகியாகச் சித்தரிப்பதற்கான சூழலையும் உருவாக்கியது. இறுதியில் அரசியலமைப்பும் உருப்படவில்லை. தமிழ்த்தேசியத் தரப்புகளும் வலுப்பெறவில்லை. இப்பொழுது சுமந்திரனும் கஜேந்திரன்களும் மோதிக் கொண்டிருப்பதற்கான காரணங்களில் பிரதானமான ஒன்று இந்த ஏக்க ராஜ்ஜிய என்பதுமாகும்.

இப்படித் தமிழ்ச் சமூகத்தைப் பலவீனப்படுத்துவதற்குப் பல காரணிகள் இருக்கும்போது அதைப் புரிந்து கொண்டு எச்சரிக்கையோடும் விவேகமாகவும் செயற்படாமல், தமக்குள் தாமே மோதிக் கொள்ளும் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது?

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களுடனான சந்திப்பில் சுமந்திரன் ஆற்றிய உரையும் அதன்போது அவர் வெளிப்படுத்திய உடல்மொழியும் அதற்கு சபையில், பார்வையாளர்களால் வழங்கப்பட்ட கை தட்டல்களும் அறியாமையின் உச்சம்.

அவ்வாறே சுமந்திரனை நோக்கிய கஜேந்திரன்களின் சவால்களும் உள்ளன. இதையெல்லாம் பார்த்து சிங்கள அதிகார வர்க்கம் மகிழ்ச்சியடைகிறது.

இவையெல்லாம் தாமும் பலியாகி, மக்களையும் பலியாக்கும் தமிழ்த்தரப்பின் பலவீனமான அரசியலன்றி வேறில்லை. இது இப்போது மட்டுமல்ல, இனியும் நடக்கப்போகிறது.

இதெல்லாம் சிங்களப் பேரினவாதச் சக்திகளுக்கு சேவகம் செய்யும் வேலையே. அரசாங்கமோ, அரசாங்கத்தோடு இணைந்து நின்றோதான் இதைச் செய்ய  வேண்டும் என்றில்லை. எதிர்த்தரப்பாக (தமிழ்த்தேசியவாதிகளாக) நிற்பதாகக் காட்டிக் கொண்டே, அரசாங்கத்தின் (ஆளும் வர்க்கத்தின்) நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொடுப்பதும் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சார்பான வேலைதான்.

ஆகவேதான் துரோகி என்ற பதம் இவர்கள் சுட்டுவதைப்போல எதிர்த்தரப்பக்கு மட்டுமன்றி, இவர்களுக்கும் பொருந்தும், பொதுவானது எனப்படுகிறது. இந்தக் கட்டுரையாளர் துரோகி என்ற சொல்லை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனோடு உடன்படவும் இல்லை.

இப்படிக் கீழ்மையான முறையில் எந்த விதமான முன்யோசனையுமில்லாமல், ஏன் சுய சிந்தனையே இல்லாமல் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தலைவர்களைப் பின்பற்றி, கட்சிகளின் பொறுப்பான பதவிகளில் இருப்போர் தொடக்கம் அவற்றின் தொண்டர்கள், ஆதரவாளர்கள், முகப்புத்தகப் புரட்சியாளர்கள் என அனைவரும் முட்டாள்களின் கூட்டமாகவே செயற்படுவதைக் காண முடிகிறது.

இது எவ்வளவு துயரமானது?

75 ஆண்டுகால அரசியல் பட்டறிவில் எவ்வளவோ விடயங்களைத் தமிழ்ச் சமூகம் கற்றுக் கொண்டிருக்க முடியும். அதன்மூலம் தன்னை நிதானப்படுத்தியிருக்கலாம். மீட்டெடுத்திருக்கலாம். ஆனால், அப்படி நடக்கவே இல்லை. பதிலாக எதையும் கற்றுக் கொள்ளாமலே பின்னோக்கிய அரசியற் பயணத்தைத் தொடருகிறது அது.

உண்மையில் முன்னெப்போதும் இல்லாத முறையில் தற்போதுதான் தமிழ்த்தேசியத் தரப்புகள் அல்லாத தரப்புகள் என அனைத்தும் அரசுக்கு வெளியே உள்ளன. அல்லது அரசை நெருங்க முடியாத நிலையில் உள்ளன. அதாவது பிராந்திய அரசியல் தரப்புகள் எதுவாயினும் அவற்றை எல்லாம் ஒரே பார்வையில், ஒரே நிலையில் வைத்து அரசாங்கம் (NPP) கையாள்கிறது. இதற்கு முன்பு அவ்வாறு இருக்கவில்லை. தமிழ்த்தரப்பில் ஒரு பகுதியை அரசாங்கம் (ஆட்சியாளர்) தம்மோடு வைத்திருந்தனர். இந்த (NPP) அரசாங்கத்தில் மட்டும்தான் அmது நடக்கவில்லை.

இது வரலாற்றில் தமிழ்த்தரப்புக்கு (பிராந்திய அரசியலை முன்னெடுப்போருக்கு) கிடைத்த நல்லதொரு வாய்ப்பாகும்.

இந்தச் சூழலில், தமிழ்த்தேசியத் தரப்புகள் அல்லாதவை அல்லது தியாகிகள் – துரோகிகள் என்ற பிரிவினையைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்ளாமல், (துடக்குப் பார்க்காமல்) இவை அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். இதற்கான முன்னுதாரணத்தை 1970 களில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் 2000 த்தில் விடுதலைப்புலிகளும் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) காட்டியுள்ளன. காலமும்  மக்களும் தமிழ்த்தரப்புகளின் ஒற்றுமையையும் திரட்சியையும்தானே வலியுறுத்துவதாக ஆயிரமாயிரம் வார்த்தைகள் சொல்லப்படுகின்றன.

அப்படியென்றால், காலத்தின் நிபந்தனையை – கட்டளையை – ஏற்பதற்கு தமிழ்த்தரப்பு மறுப்பதேன்? தனக்குள் அது சிதைந்து கொண்டிருப்பது ஏன்?

00 தமிழ்ப் பக்கம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More