இனியென்ன யாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான நிலையமும் வந்தாயிற்று. ஆயினும் அது தற்போதைக்கு இந்திய விமான நிலையம்தான் என்பதையும் ஏற்றாக வேண்டும். இந்த விமான நிலையத்துக்குப் பின்னால் இருக்கும் புவிசார் அரசியலைப் பற்றி இனிப்பேசிப் பயனில்லை. சிறுசிறுக இந்தியாவின் மாநிலமாக யாழ்ப்பாணம் – வடக்கு மாறத்தொடங்கியபோதே காட்டப்படாத எதிர்ப்பின் விளைவுதான் இது. எனவே இனி யாழ். பண்பாட்டுக்குள் நுழையப்போகும் பானி பூரியையும் சப்பாத்தியையும் நமக்கேற்ற உணவுப் பண்டங்களாக மாற்றிக்கொள்வது எப்படி எனச் சிந்திப்பதே பொருத்தமானது.
2009 ஆம் ஆண்டிலிருந்தே வடக்கின் பெருநகரமாகிய யாழ்ப்பாணம் பன்மைத்துவ கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நகரமாக மாறத்தொடங்கியது. நகரின் உணவில், அதன் இயக்கத்தில், பொலிவில் அதனை அவதானித்திருப்போம். இந்தப் பன்மைத்துவம் யாழ்ப்பாணத்துக்கேயுரிய சுதேசியத்தன்மையை அழித்து வளர்வதையும் அவதானிக்கிறோம். அபிவிருத்தி, வளர்ச்சி, மாற்றம், நாகரிகம் என்ற சொற்களுக்குள் கட்டுண்டிருக்கும் இவ்விடயத்தை நிராகரிக்கவும் முடியாது. அதனால் யாழ்ப்பாணம் என்கிற தமிழ் பண்பாட்டு நகரம், பன்மைத்துவ நகரமாக மாற்றப்பட்டுவருகிறது.
அந்தப் பன்மைத்துவ சூழலில் நமது பண்பாட்டை, வரலாற்றை எப்படி எடுத்துச்சொல்லப்போகிறோம் என்பதைப் பற்றியே இனி சிந்திக்க வேண்டும்.
சர்வதேச(இந்திய) விமான நிலையத்தின் வரவோடு யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ள போத்தீஸ், சரவணாஸ், லலிதா ஜீவலரீஸ் பண்டங்களுக்கு அடுத்த நிலையில் போர்நடந்த யாழ்ப்பாணத்தை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாவிகளின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பிருக்கிறது. அப்படி சுற்றுலாவிகள் வரும்போது யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் குறிப்பாக ஹொட்டேல் துறையில் உயரவும் வாய்ப்பிருக்கிறது.ஏனெனில் தற்போதைக்கு அவைமட்டும்தான் அதிகளவில் வளர்ந்திருக்கின்றன.
சுற்றுலாவிகள் தேடிவரும், பார்க்க விரும்பிவரும் கலாசார விடயங்கள் மேம்பட்டிருக்கின்றனவா? ஆம் நல்லூர் முருகன் ஆலயம், நயினை நாகபூசனி அம்மன் ஆலயம், வல்லிபுர ஆழ்வார் (இன்றைய விளம்பரத்தைக் கவனிக்க) உள்ளிட்ட ஆலயங்கள், இந்திய ஸ்தபதிகளின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கின்றன. கலாசார சுற்றுலா என்பதற்குள் ஆலயங்கள் மட்டும் இடம்பெற்றால் யாழ்ப்பாணம் பெருமைகொள்ளலாம். ஆனால் வரலாற்றிடங்கள், தொல்லியல் மையங்கள், பௌத்த விகாரைகள், யாழ்ப்பாணத்துக்குரிய தனித்துவ கட்டிடங்கள், யாழ். பல்கலைக்கழகம், யாழ். நூலகம், போர் சுற்றுலாவை ஈர்க்கும் விடயங்கள், தனித்துவ கலைகள், தனித்துவ உணவுகள் போன்றவற்றில் விருத்தி இடம்பெறவில்லை.
தமிழரின் வரலாற்றிடங்கள் – தொல்லியல் மையங்கள் இலங்கை மத்திய அரசின் திணைக்களங்களின் கீழே இருக்கின்றன. எனவே அதில் வரும் வருமானம் அப்பகுதி பிரதேச சபைகளுக்கோ, மாநகரசபைக்கோ உரியதல்ல. அவ்வாறான மையங்களின் கச்சான் கடை, சுண்டல்கலை, சர்பத் கதை போன்றவற்றை நடத்துபவர்களுக்கு மட்டும் வருமான அதிகரிப்பு இடம்பெற வாய்ப்பிருக்கும்.
ஹோட்டேல் துறையில் யாழ்ப்பாணம் வளர்ச்சியடைந்தாலும், அது வழங்கும் சேவை விருத்தியடைந்திருக்கிறதா என்பதை அனுபவித்தவர்கள் உணர்வீர்கள். உதாரணத்திற்கு சிரித்த முகத்துடன் வரவேற்பவர்களை தேடிக்களைக்கவேண்டியிருக்கும்.
உணவு, கலை, உள்ளிட்ட விடயங்களைக் காண்பதே அரிது. பகல் 1 மணிக்கே கொத்துரொட்டியும், கொக்கோலாவும், சிக்கன்ரைசுக்கும் இந்த நகரம் தயாராகி நீண்டகாலமாகிவிட்டது. அதற்கேயுரியதாயிருந்த உணவுச் செழுமையுடன் கூடிய யாழ்.நகரம் மீளவும் உருவாக்கப்பட்டால் பண்பாட்டு சுற்றுலாவியல் துறையில் ஏனைய நகரங்களைப்போல அடையாளம் பெறலாம்.
இந்தியாவில் இருந்து வரப்போகிற தமிழ்நாட்டுக்காரர்களில் அதிகம்பேர் போர் நடந்த யாழ்ப்பாணத்தையும், முள்ளிவாய்க்காலையும், தலைவரின் வீட்டையும்தான் பார்க்க ஆவலுடன் வரப்போகின்றனர். ஆனால் தமிழ் நலன்சார்ந்து – குறைந்தளவு உண்மையை சொல்லுமளவுக்காவது போரின் தடயமாக எதையாவது வைத்திருக்கிறோமா என்றால் எதுவுமில்லை. இராணுவத்தின் மனிதாபிமான வரலாறு ஆனையிறவிலும், மந்துவிலிலும் ஆழமாகப் பதியப்பட்டிருக்கும் வரலாற்றை இத்தகைய சுற்றுலாவிகள் எடுத்துச்செல்வர். தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியளவுக்குக் கூட இங்கெதுவுமில்லை. எனவே போர்ச்சுற்றுலா என்ற விடயத்திலும் ஏதுமில்லை.
எனவே யாழ்ப்பாணத்தை நோக்கிவரும் மிகப் பிரம்மாண்டமான பொருளாதார வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள இந்நகர சிற்பிகள் தயாராக வேண்டும். தவறின் பானி பூரி கடைகள் எங்கள் குழந்தைகள் மிகப் பிடித்த சிற்றுண்டிக் கடைகளாக மாறிவிடும். தேசிய உணவாக சப்பாத்தியும் குருமாவும் மாறிவிடும். அரசியல் அர்த்தத்தில் இந்தியாவிடம் இழந்துவிட்ட யாழ்ப்பாணத்தை, பொருளாதார அர்த்த்தில் காப்பாற்றிக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி சிந்தித்தல் வேண்டும்.
– ஜெரா-
யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ் சமூகத்தின் விழிப்புணர்வுக்காகவும் நன்மைக்காகவும் அத்தகைய பதிவுகளை வணக்கம் லண்டன் பிரசுரித்து வருகின்றது. இக் கட்டுரையின் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், இதனை எழுதிய கட்டுரை ஆசிரியருக்கு உரியது என்பதுடன் தொடர்பான பதிவுகளை அனுப்பினால் பரிசீலனையின் பின்னர் பிரசுரிக்க எமது தளம் தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். -ஆசிரியர்