September 22, 2023 4:55 am

பசித்திருக்கும் பொழுதில் நல்லிணக்கம் வருமா? | மாயன்பசித்திருக்கும் பொழுதில் நல்லிணக்கம் வருமா? | மாயன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

சம்பூர் அகதி முகாம் மக்களின் கட்டுவலைத் தொழிலைத் தடைசெய்யும் கடற்படை

…சிந்தனைக்கு…

மனிதனின் அடிப்படைத் தேவைகள் எவை என்ற பேச்செழும் போதே முதலில் பேசப்படுவது உணவு தான்….

ஏனெனில் மனித வாழ்வு என்பது மிக முக்கியமாக தனது வயிற்றை நிரப்பிய பின்னரே, அது கால்வயிறாகவோ, அல்லது அரைவயிறாகவோ, இருந்தாலும் கூட நிரப்பிய பின்னரே அடுத்த கட்டத்தை நோக்கிச் சிந்திப்பதைத் தான் வழமையாகக் கொள்கின்றது.

குறைத்து உண்பவர்கள் நாளாந்தம் தமது பசியை உணர்வதால் மற்றவனின் பசி எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டே இருப்பார்கள். அதனால் பகிர்ந்து உண்டு வாழ்வதைப் பழக்கமாக்கிக் கொள்வார்கள். அதனால் அவர்கள் ஞானிகளாக மாறிவிடுகின்றனர்.

அளவாக உண்பவன் மனிதனாக இருப்பான். தனது வயிறு முழுவதுமாக நிரம்பிய பின்னர் எஞ்சியதைப் பங்கிட விரும்புவான்.

அரக்கனோ அளவிற்கு அதிகமாக உண்டு ஏப்பம் விடுபவனாகவே இருப்பான். பகிர்தல் என்று வரும் போது போருக்குச் செல்லும் பண்புடன் அவன் இருப்பான்.

தனது வயிற்றைப் பசியில் காயவிட்டு தனது குழந்தைகளின் வயிற்றை நிரப்பப் பாடுபடும் அனைவரும் தேவ தேவியரே….

எனில் கடவுள் யார்? மற்றவருக்காக உணவை தவிர்த்து தம் உயிரைத் துறக்கும் தற்கொடையாளிகளே!

இங்கு நாம் பேச வந்த விடயம் யாதெனில் பசியும் உணவும் வாழ்விற் பிரிக்க முடியாத அங்கமாகி விடுகின்றன என்பதையே.

அப் பசியைப் போக்கப் பாடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிறுகச் சிறுகச் சிதைத்து அவர்களை அகதி முகாம்களில் வாடவிட்டு  நல்லிணக்கத்தை பற்றிப் பேசுவது எவ்வகையில் சாத்தியப்படும்.

சம்பூர் மக்கள் தமது நிலத்தை இழந்து பல ஆண்டுகள் கடந்துள்ளன. அபிவிருத்தி என்ற பெயரால் நிகழும் ஆக்கிரமிப்புக்களை தவிர்க்க முடியாது, பார்வையாளர்களாக அம் மண்ணின் மக்கள்,  வாழ்க்கையை வாழவேண்டும் என்ற முனைப்புடன் முன் நகர்த்தி வருகின்றார்கள்.

அம் முன்னகர்வுக்கு அவர்கள் செய்யும் தொழில் ஆதாரமாக இருக்கின்றது. அத் தொழிலையும் தடை செய்ய முயற்சிப்பது எவ்வாறு நல்லிணக்கத்தை அம் மக்களுக்குக் கொடுக்கும்?

கட்டுவலைத் தொழிலைத் தடை செய்தால் அவர்களின் மாற்று வருமானம் என்ன? ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளட்டும் என்பது எந்தளவிற்குச் சாத்தியம்?

அம் மக்களில் ஒருவர் சொன்ன சொற்கள் “பிறந்த நாளில் இருந்து செய்யிற தொழில் இதுதானய்யா… இத விட்டா நானும் பெண்டிரும் பிள்ளையும் சாகத்தான் ஐயா வேணும்… எனக்கு வேற வேலை ஒண்டும் தெரியாதே! என்ற அவருக்கு வயது 45ற்கு மேல் இருக்கும் இந்த வயதில் புதிய தொழிலைக் கற்றுக்கொள்வதும் புதிய தொழிலைப் புரிவதும் எவ்வளவு சாத்தியம்?

நல்லிணக்கம் என்பது எங்கிருந்து பார்க்க வேண்டும்?.. அது வெள்ளையுடை தரித்த இரண்டு அரசியல் வாதிகளின் வார்த்தைகளின் மூலம் எப்போதுமே மலரப் போவதில்லை…. பசியற்ற பாமரனின் வீட்டிற்கு எப்போது வேற்றினத்தான் தேனீர் அருந்த வருகின்றானோ அன்றே நல்லிணக்கம் துளிர்விடத் தொடங்கி விடும். இதனை உரியவர்கள் புரிந்துகொள்வார்களா?

 

 

மாயன் | திருகோணமலை 

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்