Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை எழுத்துப்பறவை ஒன்று சிறகசைத்தது விண்ணோக்கி…. | எழுத்தாளர் ந. பாலேஸ்வரி பற்றிய சிறப்புப் பதிவு | முல்லைஅமுதன்

எழுத்துப்பறவை ஒன்று சிறகசைத்தது விண்ணோக்கி…. | எழுத்தாளர் ந. பாலேஸ்வரி பற்றிய சிறப்புப் பதிவு | முல்லைஅமுதன்

2 minutes read

 

இலங்கை நாவல் இலக்கிய வரலாற்றில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் ந.பாலேஸ்வரி. அந் நாட்களில் மித்திரன், ஜோதி, தினகரன், ஈழநாடு, கல்கி, குங்குமம், உமா, தமிழ்ப்பாவை, சுடர்,  சிரித்திரன், கவிதை உறவு, தமிழ்மலர், ஒற்றைப்பனை, திருகோணமலை எழுத்தாளர் சங்கம் மலர், சுதந்திரன் போன்ற பல அச்சு ஊடகங்களில் சிறுகதை, நாவல், கட்டுரை என எழுதிவந்தவர். இன்றுவரை அவரை நாவல் ஆசிரியராகவே அனைவர்க்கும் தெரியும். அவர் சிறந்த பேச்சாளர். சிரித்திரன் ஆசிரியர் கூட அவரின் எழுத்தை சிலாகித்துப் பேசியதை கேட்டிருக்கிறேன்.

இவரின் எழுத்தில் லக்ஸ்மி, ரமணிச்சந்திரன் போன்றோரின் சாயல் இருப்பதாகக் கூறுவர். ஒருமுறை திரைப்படம் சார்ந்து  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் இவரின் நாவலைப் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசித்தோம். அப்போது செங்கை ஆழியானின் யானை எனும் நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியும் மேற்கொண்டதாகவும், வனபரிபாலனச்  சட்டம் இடம் கொடுக்காததால் அது கைவிடப்பட்டதாகவும் சொன்னார்கள். பிறகு காலம் எம்மை மாற்றிவிட அது முடியாது போயிற்று.

எளிமையாக வாழ்ந்தவர். தனது சேகரிப்புகளெல்லாம் அழிந்துவிட்டதாகவும் சொன்னார். இவரின் தந்தையின் தமிழ்ப்பற்றும், தந்தையாரின் தம்பி திருகோணமலையின் பிரபல எழுதாளராகவும் இருந்ததும் இவரையும் அத்துறை நாடிச் சென்றதாக இருக்கலாம். ஆரம்பத்தில் தந்தையாரின் பெயரான பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரையும் இணைத்தே எழுதினார். பின்னர் திருமணமாகியதும் கணவனின் பெயருடன் இணைத்து தொடர்ந்து எழுதினார்.

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர் திருகோணமலை சிறி சண்முகவித்தியாலயம், சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, திருகோணமலை புனித மரியாள் கல்லூரியிலும் கல்வியைப் பெற்றார்.

இவரின்  எழுத்துக்கு  உறுதுணையாக கணவரும், ஆசிரியைத்  தொழிலும் உதவியதாகச்  சொல்வார்.

இவரின்  தொடர்ந்த  இலக்கியப் பயணம்  இவருக்கு  தமிழ்மணி, சிறுகதைச் சிற்பி, ஆளுனர்  விருது, கலாபூசணவிருது  ஆகியவற்றுடன், 2010இல் மட்டக்களப்பு  எழுத்தாளர்  ஊக்குவிப்பு  மையம் வழங்கிய ‘தமிழியல் விருது’ குறிப்பிடத்தக்க  ஒன்றாகும்.

திருகோணமலை மனையாவழி கிராமத்தில் 07/12/1929 இல் பிறந்த இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ‘அமரர்’ நேமிநாதன் அவர்களின் உறவுக்காறர் என்றும் அறியப்படுகிறது.

அமைதியாகவும், துணிச்சலாகவும் எழுதிய பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை தக்கவைத்துக்கொண்டார். பத்திரிகை, சஞ்சிகைகள் மாத்திரமன்றி மலர்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. இவரின் நூல்களாக சுடர்விளக்கு, பூஜைக்கு வந்த மலர், உறவுக்கப்பால், கோவும் கோயிலும், உள்ளக்கோயிலில், உள்ளத்தினுள்ளே, பிராயச்சித்தம், மாது என்னை மன்னித்து விடு, எங்கே நீயோ அங்கே நானும் உன்னோடு, அகிலா உனக்காக, தத்தை விடு தூது, நினைவு நீங்காதது, சுமைதாங்கி, தெய்வம் பேசுவதில்லை என வெளிவந்துள்ளன. இதில் பூஜைக்கு வந்த மலர் குறுகிய காலத்துள் மீள்பிரசுரம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன் லண்டனிலும் வந்து தங்கி நின்றார். தனது அனுபவ வெளிப்பாடுகளை கதையாகத் தந்திருக்கிறார். வாழ்வின் பல்வேறு கூறுகளை ஜனரஞ்சகமாக எழுதுவதிலும் வெற்றிகளைக் குவித்தவர். பல இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் ஆர்வம் காட்டினார். மொழி ஆர்வமுள்ள மாணவர்களையும் செயல்பாட்டாளர்களாக்கினார்.

இதனால்தானோ என்னவோ பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புக்களில் பெண்கள் பற்றியும், சிறுகதைகள், நாவல்கள் பற்றிய ஆய்வை தங்களது பட்டப்படிப்புக்கு ஆய்வு செய்திருக்கின்றனர். அவைகள் நூலாக வரும் பட்சத்தில் மேலும் ந.பாலேஸ்வரி அவர்களின் படைப்புக்கள் பற்றி முழுமையாக அறிய வாய்ப்பாகும் என நம்புகின்றோம்.

ஆனால் அவர் பற்றிய நினைவுகளே நமக்கு எஞ்சியிருக்கும். ஏனெனில் 27/02/2014 அன்று அவரை இறைவன் அழைத்துக்கொண்டான்.

தொடர்ந்து நமக்கு அதிர்வே வந்து கொண்டிருக்கிறது. அன்புமணி, பிறேம்ஜி, பாலுமகேந்திரா, கே.எஸ்.பாலச்சந்திரன், பாலேஸ்வரி என படைப்புலகம் இழப்பைத் தந்துகொண்டிருக்கிறது.

கனத்த பொழுதுகளைச் சுமந்து செல்லும் காலம் அவர்கள் விட்டுசென்ற நட்பையும், படைப்பையும் மனங்கள் சுமந்தபடி செல்லவே செய்யும்.

 

 

ஆழ்ந்த கவலையுடன்  முல்லைஅமுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More