June 7, 2023 7:31 am

நாம் விலையாக கொடுத்த நாட்கள் எம்மை மீண்டும் தழுவிச் செல்கின்றன | துவா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உலக வரைபடத்தில் முள்ளிவாய்க்காலை அதிகமானவர்கள் தேடுவதற்கு காரணமாக இருந்த மே 18, ஈழத்தமிழர்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு  நாளாகும்.

முள்ளிவாய்க்கால் படுகொலை என்பதை அறியாதோர் யாருமே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் காவியம் வரையப்பட்ட நாள்.

தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் இடம்பெற்று நாளையுடன் 14 ஆண்டுகள் ஆகின்றது.

சர்வதேசத்தின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்று முடிந்த யுத்தத்திற்கு சர்வதேசத்திடமே நீதிகோரி இலவு காத்த கிளி போல் காத்திருக்கின்றது தமிழினம். ஆவணப்படங்களில் பதிவு செய்யப்பட்ட எம் அவலங்கள் சர்வதேசத்தில் குரல் கொடுக்க நாம் கொடுத்த விலைகள் ஏராளம்.

 உடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்த நாட்களின் வலிகள் ஈழத் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கின்றன.

கடந்த 2006 இல் மாவிலாற்றில் ஆரம்பித்த ஆற்றுப் பிரச்சினை 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழக்கனவுகள் மண்ணில் புதையுண்டு போகும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

எம் உரிமைக்காய் போராடி வித்தாகி போனவர்களையும், நாம் இழந்துவிட்ட ஈடு செய்ய முடியாத இழப்புக்களையும் நாம் விலையாக கொடுத்த நாட்கள் எம்மை மீண்டும் தழுவிச் செல்கின்றன.

ஈழத்தமிழினம் தமது கலை கலாசார விழுமியங்களை தொலைத்தது மாத்திரமன்றி அனைத்தும் சிதைக்கப்பட்டு ஊரிழந்து, உரிமையிழந்து எஞ்சிய உயிர்களுடன் மரண பயத்தில் வெளிவந்த நாட்கள்.

கொத்துக்குண்டுக்குள் இரையாகிப்போன எம்மவர்களும், கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் சகோதர, சகோதரிகளும் என வகை தொகையின்றி அழித்தொழிக்கப்பட்ட நாட்கள்.

சகோதர நாடெனக் கூறப்படும் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் பயங்கரவாதத்தினைத் தோற்கடித்தல் என்ற பரப்புரையின் கீழ் வரலாறு காணாத தமிழின் அழிப்பினை நிகழ்த்திவிட்டு வெற்றிக் களிப்பில் உள்ளது சிங்கள அரசு.

பொது மக்கள் அடைக்கலம் தேடிச் சென்று தங்கியிருந்த தறப்பாள் கொட்டைகைகள் கூட விதிவிலக்கின்றி எறிகணைத் தாக்குதல்களால் கொலைக்களமாகியது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அடியோடு அழித்துவிடவேண்டுமென்றும், தாக்குதல் திட்டத்தை திசைமாற்றிவிடக் கூடாது என்பதற்காகவும் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது மிகமோசமான திட்டமிட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

துண்டாடப்பட்ட நிலங்களில் திண்டாடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, பாதுகாப்பு வலயமென மகிந்த ரபாஜபக்ச அரசாங்கம் அறிவித்த புதுமாத்தளன் தொடக்கம் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையான்முள்ளிவாய்க்கால், வெள்ளா முள்ளிவாய்க்கால் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் மூச்சடங்கியவர்கள் போக எஞ்சியவர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு, தரம்பிரிக்கப்பட்டார்கள். அவ்வாறு தரம்பிரிக்கப்பட்டவர்களில் சிலர் சிறைக்குச் செல்ல, பலர் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இன்றுவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காவியம் முற்றுப் பெறவில்லை.

அந்தவகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசு நிகழ்த்திய இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புலம்பெயர் சமூகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் மாணவர்களும், ஐக்கிய நாடுகள் சபை ஸ்ரீலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தக் கோரியும், தண்டனை வழங்குமாறும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தாயக மக்களுக்காக போராடும் புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வுகள், ஒன்றிணைந்து நீதிகேட்டு போராட்டமாக வெடிக்கும் போது, அது அனைத்துலக சமூகங்களுக்கு கொடுக்கப்படும் பாரிய அழுத்தமாகவே காணப்படும்.

இந்நிலையில், சர்வதேச சமூகங்களால் பாரிய எழுச்சியாக நினைவு கூரப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் தாயக மக்களின் விடுதலைக்கான பாதையை திறந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

துவா

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்