Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ‘காமெடி கிங்’ கவுண்டமணி குறித்து நீங்கள் அறியாத பல தகவல்கள்

‘காமெடி கிங்’ கவுண்டமணி குறித்து நீங்கள் அறியாத பல தகவல்கள்

3 minutes read

1960 முதல் 2000 வரையில், பல படங்களில்  நகைச்சுவை நடிகராகவும்  சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் நம்ம கவுண்டமணி. தற்போது வயது முதிர்வு காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். ஆனாலும்  இவர் நடித்த  நகைச்சுவை காட்சிகளை பார்த்து இன்றைய இளம் தலை முறையினரும் வயிறு குலுங்க சிரிப்பதை காண முடியும். இவர் இன்று தனது 84ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

ஆரம்ப கால சினிமா வாழ்க்கை:

கவுண்டமணியின் நகைச்சுவையில் என்றாலே அதில்  எப்போதும்  முற்போக்கு சிந்தனை வெளிப்படையாக இருக்கும்.ரசிகர்கள் கவனத்தில் கொள்ளாத வேடங்கள் நடிக்கவேண்டும் என்கிற ஆசையில், கொங்கு தேசத்தில் இருந்து சென்னைக்கு வந்தவர் இவர். ஆரம்பத்தில் நாடகங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்த பின்னே சினிமாவில் கால் பதித்தார். இவரது இயற்பெயர் சுப்ரமணிய கருப்பையா. சினிமா வாழ்வின் தொடக்கத்தில் ரசிகர்கள் கவனத்தில் கொள்ளாத வேடங்களும், அவ்வப்போது தலைகாட்டிச் செல்லும் கதாபாத்திரங்களும்தான் கிடைத்தன. ஆனாலும் சோர்ந்துபோகாமல், துவண்டுவிடாமல், தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தார்.

Goundamani Birthday

 

கம்யூனிசம் சிந்தனை:

கவுண்டமணியின் நகைச்சுவையில் என்றாலே அதில்  எப்போதும்  முற்போக்கு சிந்தனை வெளிப்படையாக இருக்கும். முக்கியமாக பல நேரங்களில்  கம்யூனிசம் பேசுபவர் இவர்.
திரையில் விரியும் காட்சியின் அழுத்தத்தால், ரசிகர்களை மிகச்சுலபமாக அழவைத்துவிடமுடியும். ஆனால், சிரிக்கவைப்பது அத்தனை சுலபமில்லை. சிரிக்க வைப்பது, வயிறு வலிக்க சிரிக்க வைப்பது, விழுந்து விழுந்து சிரிக்கவைப்பது, மனம் விட்டு சிரிக்கவைப்பது, வாய்விட்டுச் சிரிக்கவைப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை. இதை அசாதாரணமாகச் செய்பவர்களைத்தான் மிகச்சிறந்த காமெடி நடிகர்கள் என்று கொண்டாடி கொண்டிருக்கிறோம். அந்த காமெடியில் எவரின் சாயலுமில்லாமல், சாதனைப் படைத்தவர்தான் கவுண்டமணி.

 

 

எல்லோருக்கும் பிடித்த காமெடியன்:

எல்லா ஹீரோக்களும் பொருந்தக்கூடிய ஜோடியாக கவுண்டமணி காமெடியில் பண்ணியதெல்லாம் அதகளம். இவரின் டயலாக் டெலிவரி புதுசு. இவரின் மேனரிஸமும் உடல் மொழியும் ஒரு தினுசு. எண்பதுகளில், இவரின் கால்ஷீட்டை வாங்கிவிட்டுத்தான், கதைக்கான காமெடி ஸ்கிரிப்டையே தயார் செய்வார்கள் சில இயக்குநர்கள். ‍அன்றைக்கு இருந்த ஹீரோக்களும், ‘கவுண்டமணி அண்ணனைப் போட்டாச்சுல்ல’ என்று கேட்டுவிட்டுத்தான் கால்ஷீட்டைக் கொடுத்தார்கள். ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், கே.ரங்கராஜ், குருதனபால், சுந்தர்.சி, ஷங்கர் என இன்னும் ஏகப்பட்ட இயக்குநர்கள் கவுண்டமணியின் அசுரத்தனமான காமெடி வெடிகளை கொளுத்திப் போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

Goundamani Birthday

பழம்பெரும் நடிகர்களுடன் கவுண்டமனி:

கவுண்டமணி, 1964 முதல் 1979 வரையிலான காலகட்டத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  குறிப்பாகப் மறைந்த முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான  எம். ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் உழைக்கும் கரங்கள்  படத்தில் நடித்துள்ளார்.  இதுமட்டுமின்றி  நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ‘ராமன் எத்தனை ராமனடி’ படத்தில் நடித்துள்ளார்.  மேலும் கருப்பு வெள்ளை காலத்தின்  நகைச்சுவையில் சிறந்து விளங்கிய நடிகர் நாகேஷ் உடனும் இணைந்து நடித்துள்ளார்.

அந்த காலத்திலேயே ஹீரோவை கலாய்த்தவர்…

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘16 வயதினிலே’ படம் இவருக்கு முகவரி கொடுத்தது என்று கூட சொல்லலாம். இப்படத்தின் மூலம் பாரதிராஜா, பாக்யராஜ், பி.வி.பாலகுரு, நிவாஸ் முதலான கலைஞர்கள் நமக்குக் கிடைத்தார்கள். இளையராஜாவின் இசையும் கமலின் உன்னதமான நடிப்பும் ரஜினியின் அசுரத்தனமான வில்லத்தனமும் ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான முக பாவனைகளும், காந்திமதியின் யதார்த்தமான வசனங்களும் படத்திற்கு பலம் சேர்த்தன. கவுண்டமணி, ‘பரட்டை’ ரஜினிக்கு பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, ’பத்தவச்சிட்டியே பரட்டை’ என்று சொன்னதும் அப்படியொரு கைதட்டல் கிடைத்தது. ‘இதெப்படி இருக்கு’ என்று ரஜினி கேட்க, ‘நல்லா இல்ல’ என்று சொன்ன டைமிங்கை ரசித்துச் சிரித்தனர் ரசிகர்கள்.

கவுண்டமணி-பெயர் வந்தது எப்படி? 

16 வயதிலிலே படத்தில் இடம் பெற்றிருந்த டைமிங் ரைமிங் வசனம்தான், அநேகமாக அவரது முதல் ’பஞ்ச்’சாக இருக்கவேண்டும். கவுண்டமணியின் ராஜாங்கத்துக்கான அஸ்திவாரம் அங்கேதான் போடப்பட்டது. நாடகங்களிலும் இவரது டயலாக் டெலிவரிக்கு, ஏகப்பட்ட பாராட்டுகள். அதனால் மணியை, ‘கவுண்ட்டர்’ மணி என்று அழைத்தார்கள். இதைப்பார்த்த 16 வயதினிலே படக்குழு ’ஓ… இவர் பெயர் கவுண்டமணி போல’ என்று நினைத்து டைட்டில் கார்டில் கவுண்டமணி என்றே பெயர் போட்டு விட்டனர். அப்போது, பத்தோடு பதினொன்றாக வந்த கவுண்டமணியின் பெயர், அடுத்தடுத்த படங்களில் வரும்போதே, மிகப்பெரிய கரவொலி கிடைத்ததுதான் கவுண்டமணியின் ஆரம்பகால வெற்றி.

சிறந்த வசனங்கள்:

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ‘கிளிகிளிகிளிகிளி… அங்கே ஒரு கிளி இங்கே ஒரு கிளி. அங்கே இருக்கறது பச்சைக்கிளி. இங்கே இருக்கறது பாஞ்சாலிக்கிளி’, ‘புதியவார்ப்புகள்’ படத்தின் ‘உள்ளதைச் சொல்றேங்க’, ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தின் ‘சரோசா… குப்பை கொட்றியா கொட்டு கொட்டு’ என்பதெல்லாம் கவுண்டமணியின் காமெடிப் பேட்டைக்கு ‘டேக் ஆஃப்’ கொடுத்தன. கங்கை அமரனின் ‘கரகாட்டக்காரன்’ படத்தையும் கவுண்டமணியையும் சொப்பனசுந்தரியையும் முக்கியமாக, வாழைப்பழத்தையும் மறக்கவே மாட்டார்கள் நம்ம ஊர் சினிமா ரசிகர்கள். ‘சூரியன்’ படத்தின் அரசியல்வாதி கேரக்டரில் அசத்திவிடுவார். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா’ என்பதும் ‘ஏய் இங்கே பூசு… அங்கே பூசு, பேக்ல பூசு’ என்பதும் ‘நான் ரொம்ப பிஸி’ என்பதும் இன்றைய டெக்னாலஜி உலகில் ஃப்ரஷ்ஷாகவே டிரெண்டடித்துக்கொண்டிருக்கின்றன.

மனதில் நின்ற கதாப்பாத்திரங்கள்:

உதயகீதம்’ திருடன், ‘இதயக்கோயில் படத்தில் பாடகர், ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் சைக்கிள் கடைக்காரர், ‘கன்னிராசி’யில் பிரபுவின் அக்காள் கணவர், ‘சின்னதம்பி’யில் குஷ்பு வீட்டு வேலையாள், ‘சிங்காரவேல’னில் கமலின் நண்பர்களில் ஒருவர், ‘மன்னனி’ல் ரஜினியுடன் தொழிற்சாலை ஊழியர், ‘சூரியனி’ல் அரசியல்வாதி, ‘ஜென்டில்மேனி’ல் அர்ஜுனுடன் சேர்ந்து கொள்ளையடிப்பவர், ‘இந்தியனி’ல் ஆர்டிஓ ஆபீஸ் புரோக்கர், பார்த்திபனுடன் ‘டாட்டா பிர்லா’, கார்த்திக்குடன் ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘மேட்டுக்குடி’ போன்ற பல படங்களின் மூலம் எண்ணிலடங்கா அருமையான கதாப்பாத்திரங்களை சினிமா ரசிகர்களுக்காகவே சித்தரித்துள்ளார், கவுண்டமனி. ‘நடிகன்’, ’ஜெய்ஹிந்த்’, ’சின்னதம்பி’,’மன்னன்’ கவுண்டமணியின் காமெடிக்காகவே இன்னும் ஐம்பதுநாள் சேர்த்து ஓடிய கதைகளெல்லாம் உண்டு.

கெட்டிக்கார காமெடியன்:

சத்யராஜுடன் கணக்கிலடங்கா படங்களில் நடித்த கவுண்டமனி இந்தப் பக்கம் விஜயகாந்த் அந்தப் பக்கம் பிரபு, நடுவே ஜெயராமுடன் கூட்டணி, திடீரென்று அஜித்துடன், பிறகு விஜய்யுடன்… ஆனால் எப்போதும் செந்திலுடன் என சினிமா உலகிலேயே ஒரு ரவுண்டு வந்து நம்மையும் ரவுண்டுகட்டி சிரிக்க வைத்ததில் வில்லாதிவில்லன் ஆகி விட்டார் கவுண்டமணி.

 

நன்றி : zeenews.india.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More