குரோய்டனில் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட 26 வயது பெண்ணின் பெயர் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது
சனிக்கிழமை (மே 31) காலை 9.10 மணிக்குப் பிறகு, பழைய குரோய்டனில் உள்ள ஃபிரித் வீதியில், தாக்குதலுக்கு உள்ளான 26 வயதான மர்ஜாமா ஒஸ்மான் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில், கொலை சந்தேகத்தின் பேரில் சம்பவ இடத்தில் இருந்த 33 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், கொலை சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய மற்றொரு நபர் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 1) கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மர்ஜாமாவின் மரணத்திற்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைக்க தேவையான ஆதாரங்களை சேகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, துப்பறியும் தலைமை ஆய்வாளர் டேவ் வெல்லம்ஸ் கூறினார்.
தகவல் தெரிந்த எவரும் 101 என்ற எண்ணில் பொலிஸாரை அழைக்கலாம். அல்லது X இல் @MetCC க்கு 2240/31MAY என்ற குறிப்பைக் கொடுத்து செய்தி அனுப்ப முடியும்.
அத்துடன், 100 சதவீதம் தகவல் கொடுப்பவரின் பெயர் தெரியாமல் இருக்க 0800 555 111 என்ற சுயாதீன தொண்டு நிறுவனமான Crimestoppers ஐத் தொடர்புகொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.