கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, யுகான் மற்றும் அல்பெர்டா என பல மாகாணங்களில் ஆங்காங்கே காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனால் அப்பகுதிகளில் அவசர நிலைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கனடா முழுவதும் தற்போது 465 காட்டுத் தீ சம்பவங்கள் இடம்பெறுவதாக கனடிய காட்டுத்தீ முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 70க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லைட்டன் பகுதியில் ஏற்பட்ட தீவிர காட்டுத் தீ காரணமாக பல குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றப்படுவதை பொது பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அல்பெர்டா மாகாணத்திலும் காட்டுத் தீ அபாயம் நீடிக்கிறது. இங்கு 67 காட்டுத் தீக்கான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 18 தீ விபத்துகள் தற்போது கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளன.
பொது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த காட்டுத் தீ சம்பவங்களை கட்டுப்படுத்த தீயணைப்பு குழுக்கள் முழுமையான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.
அவசர நடவடிக்கைகள், வெளியேற்ற உத்தரவுகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என பொது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.