இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் கொண்ட குழுவொன்று, இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலக குழுவினரான கெஹெல்பத்தர பத்மே, கொமாண்டோ சாலிந்த, பாணதுறை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தம்பரி லஹிரு என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெக்கோ சமனின் மனைவி மற்றும் அவர்களது மூன்று வயது குழந்தையும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) மற்றும் இன்டர்போல் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அவர்களின் திட்டங்கள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.